தே.மு.தி.க.விலும் வாரிசு அரசியல்! காஞ்சியில் மேடை ஏறும் கேப்டன் மூத்த மகன்!

By vinoth kumarFirst Published Oct 2, 2018, 11:55 AM IST
Highlights

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் காஞ்சிபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்க உள்ளார். விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் காஞ்சிபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்க உள்ளார். விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கை எதிலும் விஜயகாந்த் ஈடுபடுவதில்லை. விஜயகாந்த் பெயரில் வரும் அறிக்கைகளை கூட அவரது மனைவி பிரேமலதா பார்த்து தான் ஓ.கே. செய்கிறார். விஜயகாந்த் வெளியிடும் அறிக்கை என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அறிக்கைகளை வெளியிடுவது பிரேமலதா தான். 

விரைவில் தே.மு.தி.கவில் மிக முக்கிய பொறுப்பிற்கு பிரேமலதா வர உள்ளார். இதற்கான பொதுக்குழுவை கூட்டுவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தே.மு.தி.கவில் திடீர் திருப்பமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அண்மையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்த போது பேஸ்புக்கில் அவர் செய்த நேரலை அந்த கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும் கவர்ந்தது. 

இதனை தொடர்ந்து விஜயபிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்தும் முடிவுக்கு பிரேமலதா வந்துள்ளார். இதற்குகேப்டனும் ஓ.கே சொல்லிவிட்டார். இளையமகன் சண்முகபாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் மூத்த மகனை அரசியலுக்கு பயன்படுத்த பிரேமலதா போட்ட பிளானுக்கு உடனடியாக கிடைத்தவர் தான் அனகை முருகேன். தே.மு.தி.கவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக இருப்பவர் அனகை முருகேசன். செங்கல்பட்டு எம்.எல்.ஏவாக இருந்தவர். தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலை வீசியும் சாகும் வரை கேப்டன் தான் என்கிற வைராக்கியத்துடன் இருப்பவர்.

 

அவரை வைத்து தங்கள் மகனின் அரசியல் அரங்கேற்றத்தை செய்ய உள்ளனர் விஜயகாந்தும் – பிரேமலதாவும். வரும் 8ந் தேதி காஞ்சிபுரத்தில் மிக பிரமாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனகை முருகேசன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் கலந்து கொள்ள உள்ளார். கேப்டனுடன் தே.மு.தி.க மாநாடுகளுக்கு வந்தால் கூட விஜயபிரபாகரன் மேடை ஏறியது கிடையாது. 

அந்த வகையில் காஞ்சிபுரம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயபிரபாகரன் பங்கேற்பது அவரது அரசியல் பயணத்தின் துவக்கம் என்றே சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், முக்கிய நிர்வாகிகள் கட்சி மாற்றம், கேப்டன் உடல் நிலை பாதிப்பு என தே.மு.தி.க தொண்டர்கள் கிட்டத்தட்ட விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களை உற்சாகப்படுத்த கேப்டன் தனது மகனை களம் இறக்கினாலும் கூட இதுநாள் வரை ஸ்டாலினை வாரிசு அரசியல் என்று விமர்சித்து வந்தவர் தனது மகனை மட்டும் அரசியலில் ஈடுபடுத்தலாமா என்று மாற்று கட்சியினர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

click me!