அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது தேமுதிக? அவசர ஆலோசனை பிரேமலதா..!

By vinoth kumarFirst Published Mar 1, 2021, 1:25 PM IST
Highlights

சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் தேமுதிக மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விவகாரத்தில் அதிமுக மீது தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இதே கூட்டணியை வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர கூட்டணி கட்சி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற கட்சிகள் மும்முரம் காட்டின. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, நாங்கள் தான் 3வது பெரிய கட்சி. தங்களுக்கு ஜெயலலிதா இருந்த போது ஒதுக்கிய 41 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

ஆனால், அதிமுக தலைவர்கள் தேமுதிகவை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘ராமதாஸை தேடி, தேடி சென்று கூட்டணி குறித்து பேசும் அமைச்சர்கள், தங்களை மதிப்பதில்லை’’ என வெளிப்படையாகவே குமுறி இருந்தார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அதிமுக, தேமுதிகவை உதாசீனப்படுத்தியது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதகால அவகாசமே இருப்பதால், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளனர். எப்படியாவது 3வது முறையாக ஆட்சி அமைத்துவிட வேண்டும் என திமுகவைவிட அதிமுக தான் அதிவேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 12 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்பட்டது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 15 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என அதிமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட அளவு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் எனவும் குறைந்தது 20 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என தேமுதிக கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. விஜயகாந்த் போட்டியிடாததால் தேமுதிக வாங்கு வங்கி குறைவாக இருப்பதை காரணம் காட்டி அதிமுக மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் வராமல் புறக்கணித்தனர். அதிமுக மீது தேமுதிகவினர் அதிருப்தியில் இருப்பதால் இந்த கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் தேமுதிக மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!