நீதிமன்றத்தில் ஆனந்த கண்ணீர்விட்ட வைகோ...!! ஒட்டுமொத்த உணர்ச்சியையும் மொத்தமாக கொட்டித் தீர்த்தார்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 17, 2020, 6:03 PM IST
Highlights

நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ அவர்கள், இது என் வாழ்நாளில் நீதிமன்றத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி. சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கின்றது.

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, வைகோ தொடுத்திருந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி ஷாஹி, நீதிபதிகள் சுந்தரேசன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது வைகோ அவர்கள் எடுத்துரைத்த வாதம்:- சீமைக் கருவேல மரம் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேடானது.  இதனுடைய வேர்கள் பூமிக்குள் வெகு ஆழத்திற்கு ஊடுருவி, பெருமளவு நீரை உறிஞ்சக் கூடியது. பிராண வாயுவை அதிகமாக உறிஞ்சிக் கொண்டு, கரியமல வாயுவை வெளிப்படுத்துகின்றது. எனவே இம்மரத்தில் பறவைகள் கூடு கட்டாது, ஆடு மாடுகள் நிழலுக்குக்கூட ஒதுங்காது. 

ஆடு மாடுகள் சினைப் பிடித்தலை இம்மரம் தடுக்கின்றது. இதன் அருகில் வேறு செடி, கொடிகள் வளர முடியாது. எனவே இம்மரம் சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடான ஆபத்தாக இருந்து வருகின்றது. எனவே இம்மரங்களை தமிழகத்திலிருந்து முற்றாக அகற்றக் கோரி வழக்குத் தொடுத்திருக்கின்றோம். பரப்புரைப் பயணங்களை மேற்கொண்டோம். பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் ஆதரவு அளித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஆங்காங்கு மேற்கொண்டார். அகற்றுகின்ற பணியில் நீதிபதிகளும் பங்கேற்றார்கள். இப்பணிகளை மேற்கொள்வதற்கான மதுரை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவில், 150 வழக்கறிஞர்கள் ஆணையர்களாகச் செயல்பட்டனர்.

இம்மரங்களை முற்றாக அகற்றுவது குறித்து ஆய்வறிக்கை தருவதற்காக உயர்நீதிமன்றம் நியமித்த குழுவில் தமிழ்நாடு அரசு தலைமை வனக் காவலர் மற்றும் வனத்துறையின் இரண்டு உயர் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் தமிழ்நாடு வனத்துறை எதிர்த்து வந்தது. இதன் அடிப்படையில் அந்தக் குழு அளித்த அறிக்கை ஒருதலைப்பட்சமானது; ஏற்கத்தக்கது அல்ல. சீமைக் கருவேலம்  என்கின்ற வேலிக் காத்தான் மரம் ஆப்பிரிக்கா கண்டத்தில் பிசாசு மரம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வழக்கு குறித்து நான் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்திருக்கின்ற மனுவில், இம்மரம் குறித்து உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் வைத்திருக்கின்றேன்.

இந்தியாவின் பல ஆராய்ச்சி நிறுவனங்ளுடைய முடிவுகளையும் வைத்திருக்கிறேன்,” என்று  வைகோ குறிப்பிட்டார்.அப்போது தலைமை நீதிபதி வைகோ அவர்கள் கையில் வைத்திருந்த ஆவணங்களைக் கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார். அப்போது வைகோ சுற்றுச் சூழல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்தியாவில் சிறந்த நிறுவனம் நாக்பூரில் உள்ள நீரி அமைப்பாகும் (National Environmental Engineering Research Institute -NEERI). ஏற்கனவே இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியுள்ள அந்த அடிப்படையில், சீமைக் கருவேல மரங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வதற்கு  ஒரு குழு அமைக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார். 

வைகோ அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, சீமைக் கருவேல மரங்கள் குறித்து நீரி நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ அவர்கள், இது என் வாழ்நாளில் நீதிமன்றத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி. சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கின்றது. அண்மைக் காலத்தில் நான் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்தது இல்லை. தமிழ்நாட்டு மண்ணிலிருந்து சீமைக் கருவேல மரங்கள் அடியோடு அகற்றப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று குறிப்பிட்டார். இன்றைய வழக்கு விசாரணையின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர்கள் இரா.அருணாசலம், கோ.நன்மாறன், இரா.பிரியகுமார், ப.சுப்பிரமணி, இரா.செந்தில்செல்வன், தி.பாலாஜி, சங்கரன், வினோத்குமார், பிரபாகரன் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.


 

click me!