#Breaking : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும்… கெத்தாக அறிவித்தார் விஜயகாந்த்!!

By Narendran SFirst Published Nov 29, 2021, 6:37 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். டிசம்பர் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் விருப்பமனு பெறும் பணி தொடங்கியிருப்பதோடு கூட்டணி விவகாரம் குறித்தும் இறுதி செய்யப்பட்டு சீட் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என அரசியல் வட்டாரம் உட்பட பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்பமனு கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிகவில் அடிப்படை உறுப்பினராக இருந்தால் கூட எந்தப் பதவிக்கும் போட்டியிட விருப்பமனு அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். திமுக கூட்டணியில் அல்லது பாஜக கூட்டணியில் தேமுதிக இணையக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் விஜயகாந்தின் இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!