தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது யார் தெரியுமா...? ரகசியத்தை போட்டு உடைத்த அமைச்சர்!

By Asianet TamilFirst Published Mar 4, 2019, 10:25 AM IST
Highlights

கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் ஐந்து முறை ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற தகவலை தமிழக அமைச்சர் உதயகுமார் போட்டு உடைத்திருக்கிறார்.
 

தேமுதிகவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஐந்து முறை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் தமிழக அமைச்சர் உதயகுமார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள், பாமகவுக்கு 7 தொகுதிகள், புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக அக்கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பாமகவுக்கு இணையாக தொகுதிகளை தேமுதிக கேட்டுவருவதால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி ஏற்பட்டது. இதற்கிடையே விஜயகாந்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தரப்பிலும் விஜயகாந்துடன் பேசியதால், அந்தக் கட்சிக்கு டிமாண்ட் கூடியது.
விஜயகாந்த் முடிவுக்காக ஸ்டாலின் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்யாமல் இருக்கிறார். அதேபோல, விஜயகாந்த் கூட்டணிக்கு நிச்சயம் வருவார் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுவருகிறது. குறிப்பாக தேமுதிகவுடன் எந்த இழுபறியும் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துவருகிறார்.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் ஐந்து முறை ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற தகவலை தமிழக அமைச்சர் உதயகுமார் போட்டு உடைத்திருக்கிறார்.
தேனியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உதயகுமார், இதைத் தெரிவித்தார். அந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
“ ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இந்த விஷயத்தைச் சொல்வதால் ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கோபப்பட்டாலும் பராவாயில்லை. தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இதுவரை 5 முறை ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது யாருக்குவாது தெரியுமா? அதிமுக விளம்பரம் தேடிகொள்ளாத கட்சி.  நிறைகுடம் எப்போதும் தழும்பாது. இந்தக் கூட்டணியில் விஜயகாந்த் நிச்சயம் சேருவார். மதுரைக்கு பெருமை சேர்த்து தருவார். இந்தக் கூட்டணி வெற்றி அடையும்” என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
அதிமுக சார்பில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவரை ரகசியமாக இருந்துவந்தது. தற்போது உண்மையை உதயகுமார் உடைத்துவிட்டார். ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி உடன்பாட்டுக்கு வராமல் தேமுதிக காலம் தாழ்த்திவருவது குறிப்பிடத்தக்கது.

click me!