5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு... ஆளும் அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி!

By Asianet TamilFirst Published Nov 3, 2019, 3:19 PM IST
Highlights

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தின் மறுபதிப்பான ஆர்எஸ்எஸின் கல்வியைத் திணிக்கும் இந்தப் பழிகார செயலில் ஈடுபடுவது வெட்கக்கேடு! ஆனானப்பட்ட ஆச்சாரியாரே இந்தக் கல்விக் கொள்கையில்தான் ஒழிந்தார். அதிமுக அரசும் அந்தப் பாதையிலே வேகமாக ஓடி குடை சாயப் போகிறதா?

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளதற்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கீ. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:


“மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அதிகாரபூர்வமாக   நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அவசர அவசரமாக முந்திக் கொண்டு 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்த வழிமுறைகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது ஏன்? பிஞ்சுகளுக்கு இப்படி ஒரு நஞ்சை ஊட்டலாமா? இதன் பின்னணி என்ன? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இதில் இவ்வளவு பெரிய முரட்டு ஆர்வத்தைக் காட்டுவது ஏன்? பாஜக- ஆர்எஸ்எஸ் கொள்கையைக் காற்று வேகத்தில் திணிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தின் மறுபதிப்பான ஆர்எஸ்எஸின் கல்வியைத் திணிக்கும் இந்தப் பழிகார செயலில் ஈடுபடுவது வெட்கக்கேடு! ஆனானப்பட்ட ஆச்சாரியாரே இந்தக் கல்விக் கொள்கையில்தான் ஒழிந்தார். அதிமுக அரசும் அந்தப் பாதையிலே வேகமாக ஓடி குடை சாயப் போகிறதா? 5, 8 வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்துவதிலிருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு என்று சொன்னவரே  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். இப்போது அவருடைய துறையிலிருந்தே பொதுத் தேர்வு நடத்துவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றால், என்ன காரணம், இந்த அவசரத்தின் பின்னணி என்ன?
இந்தக் கல்வித் திட்டத்தின்படி இந்த வகுப்புகளுக்கு மொழிக்கும் கணிதத்துக்கும் இந்தியப் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மழலைக் கல்வியிலிருந்தே மும்மொழி கற்பிக்கப்படும். இந்தக் கல்வி திட்டத்தை தமிழக அரசு வேகப்படுத்துவதன் மூலம் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட இருமொழிக் கொள்கைகள் தூக்கி எறியப்பட்டு விட்டது என்றுதானே பொருள்? அண்ணா கொள்கைக்கு நாமம் போடுவதுதான் ‘அண்ணா நாமம் வாழ்க! என்பதா? மகா வெட்கக்கேடு.


 “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே” எனும் மனுதர்மம் - பாஜகவின் மேற்பார்வையில், தமிழகத்தில் அண்ணா பெயரில் உள்ள அதிமுக ஆட்சியில் கோலோச்சுகிறது என்பது வெட்கக்கேடு! ‘வினாசகாலே விபரீதப் புத்தி’ - இன்னும் ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தேர்தலைச் சந்திக்கும் அதிமுக தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளப் போகிறதா? இதனால் இழப்புக்கு ஆளாகப் போவது பாஜக அல்ல, அதிமுகதான்! கடும் இழப்பு ஆளும் அஇஅதிமுகவுக்கு ஏற்படும்  என்று எச்சரிக்கிறோம். அன்று ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பான இந்தப் புதிய கல்வித் திட்டத்தை - தந்தை பெரியார் மண், திராவிட பூமி ஒருபோதும் ஏற்காது - அனுமதிக்கவும் செய்யாது.” என்று கி.வீரமணி அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

click me!