வாட்ஸ்அப் தகவல்களை அரசே கண்காணிக்கிறதா...? மோடி அரசை விளாசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

By Asianet TamilFirst Published Nov 3, 2019, 3:07 PM IST
Highlights

பெகாசஸ் மென்பொருள் உரிமையாளர் இதுபோன்ற மென்பொருளை அரசாங்க முகமைகளுக்கு மட்டுமே விற்பதாகத் தெரிவித்துள்ளது. எனவே இந்தக் களவு வேலைகளை சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்களைக் குறிவைத்து, அரசாங்கம் செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருடைய வாட்ஸ்அப் தகவல்கள் களவாடப்படும் விஷயத்தில் அரசாங்கத்தின் முகமை ஏதாவது இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறதா என்பதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

 
இஸ்ரேலி பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர் வழியாக சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக வெளியான  தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,“வாட்ஸ்அப் நிறுவனம், இந்தியாவில் 40 பேர் உள்பட உலகில் 1,400 பேருடைய தகவல்கள் குறிவைத்து களவாடப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொண்டுள்ளது. தனிநபரின் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர்களில் உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவுவது உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டுள்ள தனிநபரின் அந்தரங்கம் என்ற அடிப்படை உரிமையை மீறிய செயல். பெகாசஸ் போன்ற உளவு மென்பொருளைப் பயன்படுத்துவது, ஒருவரின் தனிப்பட்ட தரவுகளை அவருக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக சோதனை செய்வதற்கு சமம்.


பெகாசஸ் மென்பொருள் உரிமையாளர் இதுபோன்ற மென்பொருளை அரசாங்க முகமைகளுக்கு மட்டுமே விற்பதாகத் தெரிவித்துள்ளது. எனவே இந்தக் களவு வேலைகளை சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்களைக் குறிவைத்து, அரசாங்கம் செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம், தன்னுடைய முகமைகள் ஏதாவது இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறதா என்பதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். சட்டப்படி மக்களுடைய தொலைபேசிகளை ஊடுருவுவது சைபர் குற்றம். பெகாசஸ் மென்பொருளை அரசு பயன்படுத்தவில்லையெனில், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதை யார் பயன்படுத்தியது என்பதை விசாரிக்க வேண்டும்.
இந்தப் பிரச்னை மீது கிரிமினல் விசாரணை நடத்தப்பட வேண்டும். குடிமக்களின் அந்தரங்கம், உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஓர் ஒருங்கிணைந்த தரவு பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்” என அந்த அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தெரிவித்துள்ளது.

click me!