கையில் காயம் ஏற்பட்டால் கையை வெட்டுவீங்களா..? மோடி அரசின் வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு கி. வீரமணி கண்டனம்!

By Asianet TamilFirst Published Sep 2, 2019, 10:01 PM IST
Highlights

தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியினைக் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வடநாட்டு வங்கியுடன் இணைப்பதான அறிவிப்பு தமிழ்நாட்டு வங்கியின் சேவைப் பயன்பாட்டை பாதித்திடும்  முயற்சியாகவே இந்த இணைப்பு கருதப்பட வேண்டி உள்ளது.

மத்திய பாஜக அரசு நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை காட்டுவதாக இருந்தால் வங்கி இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:


கடந்த காலங்களில் வங்கிகளின் இணைப்பால், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் முன்னேற்றம் எதுவும் நடை பெறவில்லை என்பதே உண்மை நிலை. தொடக்க காலங்களில் தனியார் வங்கிகள் திவால் ஆன நிலையில் அவைகள் அரசு வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வங்கிகளில் உள்ளோரின் பணியும் சேவையும் பாதுகாக்கப்பட்டது. 
தற்போது 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 பெரிய வங்கிகளாக்கும் ஒரு சீர்திருத்த நடவடிக்கையை பாஜக அரசு எடுத்தது கண்டனத்துக்குரியது. உலகத்தரத்திற்கு இந்நாட்டு வங்கிகளை உயர்த்துவதாகச் சொல்லப்படும்  இந்த உள்நாட்டு மக்களுக்கு பயன்படாத வங்கிச் சீர்திருத்த நடவடிக்கை தேவையில்லாதது. பெரிய அளவிலான வங்கிகள்தான் சிறப்பாகச் செயல்படும்; சிறிய வங்கிகள் முழுமையான சேவையினை வழங்க முடியாது எனும் வல்லரசு நாடுகள் கருதுகோள் நம் நாட்டுக்குப் பொருந்தாது.
 நமது நாட்டில் உள்ளது போல விரிவான - பெரும் பகுதிகளை உள்ளடக்கிய வங்கிச் சேவை வழங்கப்பட்டு வரும் நிலை எந்த நாட்டிலும் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட நல்ல விளைவு அது. பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் குறைகள் இருக்கலாம். குறைகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கையில் காயம் ஏற்பட்டால் மருந்து போட்டு சிகிச்சை அளித்திட வேண்டும். கை இருப்பதால்தானே காயம் ஏற்படுகிறது என கையை வெட்ட நினைக்கும் சிகிச்சை முறை சரியானதாகாது. 
வங்கிகளின் செயல்பாட்டை சீர்செய்திட- சிகிச்சை அளித்திட வங்கிகள் இணைப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. தவறான சிகிச்சை அளித்து நோயாளியை கொன்று விடக்கூடாது. அளிக்கப்படும் சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தப்பட வேண்டும்; நோயை விட சிகிச்சை முறை ஆபத்தானது' என்பதைப் போன்று உள்ளது, பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்.
விபரீத விளைவுகளை உருவாக்கவல்ல வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை வேண்டாம். மத்திய பாஜக அரசு நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை காட்டுவதாக இருந்தால் இந்த வங்கி இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும். அதனால் தேவையற்ற விளைவுகளை அறுவடை செய்திடும் சூழல் நிச்சயம் உருவாகும்.
தனியார் வங்கிகள் அரசுடைமையாகி, பின்னர் பொதுத்துறை வங்கிகளானாலும் அந்தந்தப் பகுதி மக்களுக்கான வங்கியாகத்தான் அவை  செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பொதுத்துறை வங்கிக்கும் அந்தந்தப் பகுதியில், மாநிலப் பகுதியில் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவையாற்றும் ஒருவித கலாச்சாரத்தன்மை உண்டு; வங்கிப் பாரம்பரியமும் உண்டு; அதன் பலன் பொதுமக்களுக்கானதே. அதனை உடைத்தெறிந்து இணைப்பு நட வடிக்கையினை மேற்கொள்வது கூடாது.


இப்பொழுது 10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் மூலம் 4 பெரிய வங்கிகள் உருவாகும் என்கிறார்கள். மூன்று பெரிய வங்கி உருவாக்கத்தில் ஒருவித தொடர்பு - சேவை வழங்கிடும் பகுதிகளுக்கிடையே தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியினைக் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வடநாட்டு வங்கியுடன் இணைப்பதான அறிவிப்பு தமிழ்நாட்டு வங்கியின் சேவைப் பயன்பாட்டை பாதித்திடும்  முயற்சியாகவே இந்த இணைப்பு கருதப்பட வேண்டி உள்ளது. மத்திய அரசு, வங்கிகள் இணைப்பை திரும்பப் பெறும் முடிவை எடுப்பதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கமுடியும்.
இவ்வாறு கி. வீரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!