கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2021, 4:05 PM IST
Highlights

சுற்றுச்சூழல் மற்றும் நகரமைப்பு திட்ட இயக்குனர் அனுமதி பெற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருப்பதால் இழப்பு என ஒப்பந்ததாரர் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். 

கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் பல ஆண்டு காலமாகப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, கோரிக்கை மனுக்கள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரித்து அறிவித்தார். 

இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் சந்தோஷம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. அதன்படி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக கள்ளக்குறிச்சி அருகில், 5 கிலோ மீட்டர் தூரமுள்ள, வீர சோழபுரம் என்ற ஊரில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிலம், அவ்வூரிலுள்ள அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலம். 

இந்தக் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு, அறநிலையத்துறை மூலம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதற்கு முன்பாக, இந்த நிலத்தைக் கொடுப்பது சம்பந்தமாகக் கருத்துக் கேட்புக் கூட்டம், கடந்த அக்டோபர் 29 -ஆம் தேதி, இந்து சமய அறநிலையத் துறையில், ஆட்சியர் நடத்தியதில், ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் கள்ளக் குறிச்சியில் அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்.

 

சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை, ரூ.1 கோடியே 98 லட்சத்திற்கு அரசுக்கு வழங்குவது என அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரம் அர்த்தநாரிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை, கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக அளிக்கக் கூடாது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். 

சுற்றுச்சூழல் மற்றும் நகரமைப்பு திட்ட இயக்குனர் அனுமதி பெற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருப்பதால் இழப்பு என ஒப்பந்ததாரர் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். இதனையடுத்து கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

click me!