
புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என்று மக்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அரசு, லஞ்ச லாவன்யத்திற்காக மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறதா என்ற அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளது குட்கா புகையிலை ஊழல் குற்றச்சாட்டு.
விஜயபாஸ்கருக்கு 40 கோடி
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய எம்.எடி.எம். எனப்படும் குட்கா நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவரிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் 40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. வருமான வரித்துறையின் சோதனையின் போது அந்த பங்குதாரரான மாதவராவ் இதனை ஒப்புக் கொண்டதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதனை ஊர்ஜீதப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும் படி அரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிக்க வைத்த வருமான வரித்துறை நோட்டீஸ்
சோதனை குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் குட்கா நிறுவன பங்குதாரர் மாதவராவ் என்பவரிடம் நடத்திய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாகவும், குட்காவை தடையின்றி விற்பனை செய்ய தரகர் ராஜேந்திரன் என்பவர் மூலம் விஜயபாஸ்கருக்கு ஒவ்வொரு மாதமும் 14 லட்சம் ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இம்முறைகேட்டில் இந்நாள் தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கும், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜுக்கும் தொடர்பு இருப்பதாக டைம்ஸ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜூக்கு தொடர்பு?
விஜயபாஸ்கரைத் தொடர்ந்து சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜுக்கு 15/09/2015 அன்று 15 லட்சமும், 18/12/2015 அன்று 15 லட்சமும் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதையை தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கு 12/10/2015 அன்று 15 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டதாக வருமான வரித்துறை நோட்டீஸை சுட்டிக் காட்டி டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது தெரிவித்துள்ளது.
தீபாவளி, கிறிஸ்துமஸ் போனஸ்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 14 லட்சமும், ஜார்ஜ் மற்றும் டி.கே.ராஜேந்திரனுக்கு 15 லட்சமும் ஒவ்வொரு மாதமும் அளிக்கப்பட்டுள்ளது வருமான வரித்துறை நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் மூவருக்கும் கூடுதல் பணம் வழங்கப்பட்டுள்ளதுாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் குட்கா விவகாரம்
குட்கா ஊழல் விவகாரம் தமிழக சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது. இன்று காலை சட்டமன்றம் கூடியதும், அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கும்படி எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தாதல் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
களமிறங்கும் மத்திய அரசு
அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் நடத்தப்பட்ட குதிரை பேரம் குறித்த வீடியோ ஆதாரம் வெளிவந்த நிலையிலும், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையே மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குட்கா விற்பனையை தடையின்றி தொடர தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கையூட்டு பெற்று அனுமதி அளித்ததை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேறு கண்ணோட்டத்தோடு அனுகி வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி அரசுக்கு பெரும் சிக்கல்
குதிரை பேர விவகாரமே நீரு பூத்த நெருப்பாய் கணன்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது குட்கா போதைப்பொருள் ஊழல் குற்றச்சாட்டு எடப்பாடி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரித்துறையினர் உரிய ஆதாரங்களுடன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதால், ஆட்சி கலைக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.