பாஜகவில் இணையும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் !!! எடியூரப்பா அதிரடி !!

By Selvanayagam PFirst Published Nov 13, 2019, 9:01 PM IST
Highlights

கர்நாடகாவில்  மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்த கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும்  நாளை பாஜகவில் இணையவுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்தன. மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் 2023 வரை தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதித்தார்.

இதில் 14 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கடந்த மாதம் 25-ம் தேதி இறுதி விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே, சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும். அதே நேரத்தில் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானது அல்ல. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எடுத்துக் கொண்ட கால அளவு தவறானது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பை தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீங்கியது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

click me!