
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை, சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட்டது என்று அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிமுகவினரின் உற்சாகத்தைத் தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், கவிதை ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில், கூடா நட்பு கோர்ட்டில் முடியும் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.
அதில் டிடிவி தினகரன் மற்றும் அவருடன் சென்றவர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. மாஃபியாவை நம்பி மகராசி இயக்கம் விட்டு முறை தவறிப் போனவர்கள் முச்சந்தியில் நிற்கிறார்கள் முகவரியற்று முடிகிறார்கள் என்று அந்த கவிதை துவங்கியுள்ளது. திகார்களோடு திசைமாறிப் போனவர்கள், திக்கற்று நிற்கிறார்கள்.
அரசியலில் வக்கற்று முடிகிறார்கள்... சந்தனமாய் கரைந்து உழைத்த தொண்டர்களை உதாசீனம் செய்து சாத்தானோடு போனவர்களை சட்டமே முடித்தது. துரோகம் நிலைக்காது என்பதை சத்யநாராயணன் தீர்ப்பு சாஸ்வதமாய் நிலைக்குது. நன்றிதனை கொன்று நயவஞ்சகத்தோடு சென்றவர்கள் நாசமாகிப் போனார்கள் என்று அந்த கவிதை முடிக்கப்பட்டுள்ளது.