பலமான வேண்டுதலுக்காக புனித நீராடினோம்... தங்க தமிழ்செல்வன் வைத்த டுவிஸ்ட் இதோ...!

By vinoth kumarFirst Published Oct 23, 2018, 3:48 PM IST
Highlights

18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்து தமிழகத்துக்கு நல்லது பிறக்க வேண்டும் என்பதற்காக தாமிரபரணி மகா புஷ்கரத்தில் நீராடி வழிபட்டோம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார்.

18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்து தமிழகத்துக்கு நல்லது பிறக்க வேண்டும் என்பதற்காக தாமிரபரணி மகா புஷ்கரத்தில் நீராடி வழிபட்டோம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். 

இதையடுத்து கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கியதால் இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வழங்கப்பட்டது. 

இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என கூறப்படும் நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களையும், குற்றாலத்தில் தங்குமாறு டிடிவி தினகரன் அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதனை அடுத்து, தங்க தமிழ்செல்வன் உட்பட 7 பேர் குற்றாலம் சென்றனர். 

குற்றாலம் சென்ற தங்க தமிழ்செல்வன், பிரபு, மாரியப்பன், ரெங்கசாமி, கதிர்காமம், பாலசுப்பிரமணியன், சாத்தூர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அம்பாசமுத்திரம் அருகே, பாபநாசத்தில் தாமிரபரணி மகா புஷ்கரம் நீராடி வழிபட்டனர். இதன் பிறகு, தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தமிழக அரசு உதவி செய்யாதது வருத்தமளிக்கிறது. இந்தப் பாவம் எடப்பாடி அரசை சும்மா விடாது. 

18 எம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்து தமிழகத்திற்கு நல்லது பிறக்க வேண்டும் என்பதற்காக நீராடி யாகம் வளர்த்து வழிபடுகிறோம். மதசார்பற்ற கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம். காவிரி படுகையை விவசாய நிலமாக்குவோம். பூமியில் வைரம் கிடைத்தாலும் எடுக்க விடமாட்டோம். ஜெயக்குமார் தன் மீது சுமத்தப்பட்ட புகார் குறித்து தகுந்த வகையில் விளக்கமளிக்க வேண்டும். ஓ.பி.எஸ்.யும் எடப்பாடியையும் பிரிக்க எந்த சக்தியும் தேவையில்லை. பிரிந்ததால்தான் ஓ.பி.எஸ். தினகரனை வந்து சந்தித்தார். தீர்ப்புக்குப் பின் அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் இணைவது உறுதி. நாளை மறுநாள் சென்னை செல்வோம் என்று கூறினார்.

click me!