திமுக - காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு பேசி தீர்க்கப்படும்... கே.எஸ். அழகிரி திட்டவட்டம்..!

By Asianet TamilFirst Published Jan 17, 2021, 9:56 PM IST
Highlights

ஜனநாயகத்துக்கு எதிராக ஆளுநரை வைத்து ஆட்டிப்படைக்கும் நிலைக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். இது புதுவைக்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்தல்ல, தென்னிந்தியாவிற்கே ஏற்பட்ட ஆபத்து என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நடத்தும் எந்தக் கூட்டங்கள், போராட்டங்கள் எதிலும் திமுக பங்கேற்காமல் இருந்துவருகிறது. மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில்தான் கூட்டணி என்றும்; புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என்றும் புதுச்சேரியில் உள்ள திமுக தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். எனவே, காங்கிராஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகும் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரி ஆளுநர் சட்டத்துக்கு புறம்பாக ஒற்றை ஆட்சி நடத்தி வருகிறார். ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காந்திய வழியில் அமைச்சர் கந்தசாமி போராடி வருகிறார். இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து. ஜனநாயகத்துக்கு எதிராக ஆளுநரை வைத்து ஆட்டிப்படைக்கும் நிலைக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். இது புதுவைக்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்தல்ல, தென்னிந்தியாவிற்கே ஏற்பட்ட ஆபத்து.


புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையில் உள்ளவர்கள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதை பேசி தீர்க்க வேண்டும். முதல்வர் நாராயணசாமி அதைத் திறமையாக செய்வார். திமுக தலைவர் ஸ்டாலினும் இதுதொடர்பாக பேசி முடிவெடிப்பார் என்ற நம்பிக்கை  எனக்கு உள்ளது. தொகுதி பங்கீட்டில் கடந்த முறையைவிட இந்தமுறை அதிகம் அல்லது குறைவு என்ற விவாதம் எதுவும் இப்போது இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 இடங்களைப் பெற்று 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியில் ஒற்றுமையாக உள்ளது.


காங்கிரஸ்-திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என்று நாங்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளோம். ஆனால் அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 
 

click me!