டெல்லி போல தமிழகத்திலும் கலவரம்... பாஜக முயற்சிப்பதாக வண்ணாரப்பேட்டையில் முழங்கிய பா.ரஞ்சித்!

By Asianet TamilFirst Published Feb 29, 2020, 11:18 PM IST
Highlights

 "பா.ஜ.க அரசு பாசிச மனப்பான்மையில் உள்ளது. சிறுபான்மையின மக்களை ஒடுக்கும் செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் நடந்ததைபோல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். அதை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வோர் இந்தியருக்குமான போராட்டம்” எனப் பேசினார்.
 

டெல்லியில் நடந்ததைபோல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள் என்று இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராடிவருகிறார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 16 நாட்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துவருகிறார். அந்த வகையில் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித் ஆகியோர் போராட்டக் களத்துக்கு வந்து நேரில் ஆதரவு தெரிவித்தனர். 
அப்போது இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “சி.ஏ.ஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் நாட்டின் சாமானிய மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்தச் சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல. அஸ்ஸாமில் தடுப்புக் காவல் முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்துக்களே அதிகளவில் இருக்கிறார்கள். ஆகவே அனைத்து தரப்பு மக்களுமே இந்தச் சட்டங்களை எதிர்த்து போராட வேண்டும்” எனத் தெரிவித்தார். 
அதேபோல இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, “டெல்லியில் போராட்டத்தில் நடந்தது திட்டமிட்ட வன்முறை. இந்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவற்றை நாம் இரும்புக்கரம் கொண்டாவது தடுத்தாக வேண்டும். பா.ஜ.க அரசு பாசிச மனப்பான்மையில் உள்ளது. சிறுபான்மையின மக்களை ஒடுக்கும் செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் நடந்ததைபோல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். அதை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வோர் இந்தியருக்குமான போராட்டம்” எனப் பேசினார்.

click me!