நீதி தாமதித்தால் , கருப்பு அங்கிகள் இடத்தை காக்கிச் சட்டைகள் எடுத்துக்கொள்வர்...!! எச்சரித்த சு. ப வீரபாண்டியன்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2019, 11:11 AM IST
Highlights

 தங்களுக்கு வேண்டாதவர்களைச் சுட்டுக் கொல்ல  அரசாங்கமும், காவல்துறையும் இந்த வழியைத் தொடர்ந்து பின்பற்ற  முயல்வார்கள்.  
 

நீதி தாமதிக்கப்பட்டால் என்கவுண்டர்கள் தொடரத்தான் செய்யும் என திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.  அதன் முழு விவரம் : -  ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, மிகக் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஒரு வாரத்திற்குள், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் கொடுத்துள்ள இந்தத் தண்டனையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

 

பொள்ளாச்சியில், இதனை விடக்  கொடுமையான குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இன்றுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை. முறையான விசாரரணைகள் கூட நடைபெறவில்லை. இதற்காக மக்கள் கோபம் கொண்டு கொந்தளிக்கவுமில்லை. 2012 ஆம் ஆண்டு ஓடும் தொடர்வண்டியில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக்  கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கு நடைபெற்று முடிந்துள்ளது. தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  

மூன்று  வழக்குகளும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. ஆனால், தீர்க்கப்படும் விதமோ முற்றிலும் வேறானவை. விசாரணைக் கைதிகள் தப்பியோட முயன்றபோதும், தங்களையே தாக்க முயன்றபோதும், வேறு வழியின்றி அவர்களைச்  சுட்டுக் கொன்றுவிட்டோம் என்பது, காலகாலமாகக் காவல்துறை காட்டும் காரணம். மக்களுக்கும் இது தெரியும். இந்தக் கூற்றை யாருமே நம்புவதில்லை.  ஆனாலும், இதனை மக்கள் இன்று கொண்டாடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 

ஒன்று, தவறுகள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கைகள் மிக மிகக் காலம் தாழ்த்தக்கூடியவை என்பதும், தாமதிக்கப்பட்ட நீதியாகவே அது இருக்கும் என்பதும் பொதுவான கருத்து.  காலத் தாழ்வு ஏற்படும்போது குற்றவாளிகள் பலர் தப்பித்து விடுகின்றனர் என்பதும் பொதுவான எண்ணம். எனவே உடனடியாக வழங்கப்படும் தண்டனை, மக்களால் வரவேற்கப்படுகிறது. 

இரண்டாவது காரணம், இப்படிக் கடுமையான  தண்டனைகள் வழங்கப்பட்டால்தான், அடுத்து இதுபோன்ற கொடுமையான தவறுகள் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை.  இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் மக்கள் இது போன்ற நிகழ்வுகளை வரவேற்பது இயற்கை. பெரிய அரசியல் கட்சிகளும், மக்களின் பொதுவான கருத்துகளோடு இயைந்து செல்ல வேண்டியவர்களாகவே உள்ளனர்.

 

இருப்பினும், சட்டத்தின் ஆட்சியிலும், ஜனநாயகத்திலும்  நம்பிக்கை உள்ளவர்கள், நீதிமன்ற நடைமுறையில்  உள்ள குறைபாடுகளை  அறிந்திருந்த போதிலும், இவ்வகையான தண்டனைகளை ஏற்க முடியாது. இது மிகப் பெரிய மோசமான  முன்மாதிரியாக அமைந்துவிடும். தங்களுக்கு வேண்டாதவர்களைச் சுட்டுக் கொல்ல  அரசாங்கமும், காவல்துறையும் இந்த வழியைத் தொடர்ந்து பின்பற்ற  முயல்வார்கள்.  அதற்குப் பிறகு, சட்டம், நீதிமன்றம் எல்லாம் வெறும் கேலிக்கூத்துகளாகத்தான் ஆகிவிடும். 

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருக்கும் குறைபாடுகளைக் களைய வேண்டியது மிகவும் தேவையான ஒன்றுதான். நேர்மையும், விரைவும் நீதிமன்றத்தின் அடிப்படைக் குணங்களாக இருந்தால்தான், மக்கள் அவற்றை நம்புவார்கள். இல்லையெனில், கருப்பு அங்கிகளின் இடத்தைக் காக்கிச் சட்டைகள் மிக எளிதில் எடுத்துக் கொள்ளும்.  அந்தப் புதிய ஆபத்து, பழைய ஆபத்தை விடவும் கூடுதல் கேடுகளை விளைவிக்கும். 

click me!