" ஸ்டாலின் ஆட்சிக்கு டிங்குடி டிங்காலே "... : திமுக அரசை பயங்கரமா கலாய்த்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Dec 17, 2021, 2:02 PM IST
Highlights

பொய் வழக்கு மூலம் அதிமுக வை அழிக்க நினைப்பது பகல் கனவு , கருணாநிதி காலத்திலும் இதுபோல்தான் செய்தார்கள்.எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது , என கருத்துரிமையை புறக்கணிக்கிறது திமுக அரசு.

காய்கறி , மளிகைப் பொருட்களின் மாலையுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் 'டிங்குடி டிங்காலே ..ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே ' என பாடல்பாடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் , திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியும் அதிமுக சார்பில் சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கழுத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் மாலைகளை அணிந்தும் , பாடல் பாடியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 

காய்கறி , மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக கடுகு , சீரகம் , உளுந்தம் பருப்பு , கொண்டைக் கடலை , பொட்டுக் கடலை , வெந்தயம்  , உப்பு , மிளகாய் , சேமியா பாக்கெட்டுகள் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றையும் வெங்காயம், தக்காளி , வெண்டைக்காய் , கோவைக்காய் , பச்சை மிளகாய்  கோர்க்கப்பட்ட மற்றுமொரு மாலையையும் கழுத்தில் அணிந்துகொண்டு ஜெயகுமார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். 

ஆர்ப்பாட்டத்தின்போது ஜெயகுமார், "டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே .. தலையில் துண்டு போட்டுகனு தங்கமே தில்லாலே..." என பாடல் பாடியதுடன் வெறும் 2 மணி நேரத்தில் இப்பாடலை தான் எழுதியதாக  கூறியதை தொடர்ந்து அங்கு நின்ற நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அண்ணன் DJ வாழ்க என உற்சாகக் குரல் எழுப்பினர் . 

ஜெயகுமார் பேட்டி

"ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் நீட்  காரணமாக 5 மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளார்கள். தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அராஜகம் , அடவாடி செய்து கடைகளில் மாமூல் வசூலிக்கிறார்கள்.கோவையில் 10 ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது , தமிழக அரசு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை தரவில்லை. 

மழை நின்ற பிறகும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை , முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததால் ஸ்டாலின் தொகுதியிலேயே தண்ணீர் இடுப்பளவு தேங்கியது. பொய் வழக்கு மூலம் அதிமுக வை அழிக்க நினைப்பது பகல் கனவு , கருணாநிதி காலத்திலும் இதுபோல்தான் செய்தார்கள். எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது , என கருத்துரிமையை புறக்கணிக்கிறது திமுக அரசு. திமுகவிற்கு ஒத்தூதினால்தான் கருத்து சுதந்திரம் என்கிறார்கள். திமுகவை எதர்ப்பவர்கள்  மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. 

நடப்பது குடும்ப ஆட்சி , ஸ்டாலின் முதல்வராக இருந்தாலும் , நிழல் முதல்வர் உதயநிதி மற்றும் சபரீசன்தான் என்பது ஊரறிந்த உண்மை. உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என திமுகவில் சிலர் கூறுகின்றனர்...  எதுவும் நடக்கலாம். ஆனால் உதயநிதி அமைச்சரானாலும் தமிழகத்திற்கு நல்லது நடக்காது. நான் மட்டும் தனியாக இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை , கட்சியின் அமைப்புப்படி பல மாவட்ட செயலாளர்கள் இதுபோல ஆங்காங்கு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறோம் "  இவ்வாறு அவர் ஆர்பாட்டத்தில் கூறினார். 
 

click me!