
டெல்லி திஹார் சிறையில் இருந்தது விடுவிக்கப்பட்ட அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு கட்சிப் பணிகளில் ஈடுபட முழு உரிமை உள்ளது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் , விசாரணைக்காக டெல்லி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கட்சியில் உள்ளவர்கள் என்னை வெளியேறச் சொன்னால் தாராளமாக வெளியேறிவிடுவேன் என்றும், கட்சியை அவர்களே நடத்திக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.நேற்று முன்தினம் தினகரனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்தது சென்னை புறப்பட்ட டி.டி.வி.,சென்னை சென்று கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சிப் பணியை தொடங்குவதற்கு டி.டி.வி.தினகரனுக்கு முழு உரிமை உள்ளது என தெரிவித்தார்.
தினகரனை நாங்கள் யாரும் கட்சியை விட்டு நீக்கவில்லை என தெரிவித்த அமைச்சர், சிறைக்கு செல்லும் முன், அவராகவேதான் கட்சியை விட்டு வெளியேறினார் என கூறினார்.