
எவராலும் வெல்ல முடியாத தலைவர் கருணாநிதி என்றும் தலித் மற்றும் ஈழமக்களுக்காக போராடியவர் கருணாநிதி எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழாவையொட்டி திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசியல் களத்தில் எவராலும் வெல்லமுடியாத தலைவராக விளங்குபவர் தலைவர் கருணாநிதி.
94வது பிறந்தநாள் காணும் அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
80 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டும், கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியும் வருகின்ற தலைவர் கருணாநிதி 94வது அகவையைத் தொடுகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்து சமூக நீதிக்காக சமராடிய கருணாநிதி 100 ஆண்டுகளை தாண்டியும் வாழ்ந்து வழிகாட்ட வேண்டும் என வாழ்த்துகிறோம்.
கருணாநிதிக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருந்ததும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதுதான் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
இந்தியாவிலேயே முதன்முதலாக தலித் மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்தது அவர்தான். தலித்துகளுக்கான நலத் திட்டங்கள் எல்லாவற்றையும் தலித் கிறித்தவர்களுக்கும் விரிவுப்படுத்தியது அவரது சாதனைதான்.
ஈழத் தமிழர்கள் தொடர்பாக இன்றைக்கு பேசிவரும் அனைவருக்கும் ஊக்கமாக திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.
ஈழத் தமிழர் பிரச்னைக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர். மத்திய அரசால் ஆட்சியை இழந்தவர்.
அவர்களது பிரச்னையை உலகறிய செய்யும் பொருட்டு 'டெசோ' என்கிற அமைப்பை உருவாக்கி இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அதைப்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர்.
கருணாநிதி நீடோடி வாழ உளமாற வாழ்த்துகிறோம்.
இவ்வாறு திருமாவளவன் அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.