
தினகரன் திரும்ப வந்தால் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்ததாகவும் தமிழகத்தின் மின் தேவைக்கான நிலக்கரியை தரும்படி கோரிக்கை விடுத்ததாகவும் பிரதமரிடம் அரசியல் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
மின்சாரத்துறை தொடர்பான ஒரு கோரிக்கையை பிரதமரிடத்தில் வைக்க செல்லும்போது துறை சார்ந்த அமைச்சரான தங்கமணியை ஏன் உங்களுடன் அழைத்து செல்லவில்லை? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். நியாயமான அந்த கேள்விக்கு, பதிலளிக்காமல் மலுப்பிய பன்னீர்செல்வம் கடைசி வரை பதிலளிக்கவில்லை.
பிரதமருடன் அரசியல் பேசவில்லை என்று பன்னீர்செல்வம் கூறினாலும், அமைச்சர் தங்கமணியை உடன் அழைத்து செல்லாதது பிரதமருடன் பன்னீர்செல்வம் அரசியல் பேசியிருப்பாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தினகரன் திரும்ப வந்தால் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு, இனிமேல் கட்சியில் கீழ்மட்டத்தில் இருந்து உழைத்து வருபவர்களைத்தான் சேர்த்துக்கொள்வோம் என பதிலளித்தார். தினகரன் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார் என்பதை மறைமுகமாக இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.