அதிமுக மற்றும் திமுக கூட்டணியால், கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, சிறிய கட்சிகளுடன், அமமுக பேச்சு நடத்தி வருகிறது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட்டது; திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பிஜேபி தலைமையில், தேமுதிக - பாமக - மதிமுக மற்றும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றியது. பிஜேபி கூட்டணி, இரு தொகுதிகளை பிடித்தது; திமுக கூட்டணி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும், அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு மாற்றாக, தேமுதிக - மதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் - தமாகா போன்ற கட்சிகள் இணைந்தன. மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், மூன்றாவது அணியை உருவாக்கின.தேர்தல் முடிவில், அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. திமுக பிரதான கட்சியாக உருவானது; மக்கள் நலக் கூட்டணி, காணாமல் போனது.
நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், அதிமுக தலைமையில், வலுவான கூட்டணி உருவாகி உள்ளது. இக்கூட்டணியில், பாமக - பிஜேபி கட்சிகள் இணைந்து உள்ளன. தேமுதிக மற்றும் சில கட்சிகள் இணைய உள்ளன.அதேபோல், திமுக கூட்டணியில், காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்றவை இணைந்துள்ளன. மேலும், சில கட்சிகள் இணைய உள்ளன.
மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் கனவுடன் இருந்த, அமமுகவுடன் சேர, கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. எனினும், அதிமுக - திமுக, கூட்டணியில் இடம் கிடைக்காத கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணியை உருவாக்க, தினகரன் முயற்சி மேற்கொண்டு உள்ளார். சரத்குமார் கட்சி, வேல்முருகன் கட்சி போன்ற வற்றுடன் பேச்சு நடந்து வருகிறது.
அமமுக வுக்கு, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்திய தேசிய லீக் தலைவர், முகமது சுலைமான் மற்றும் நிர்வாகிகள், தினகரனை சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, ஆலோசனை நடத்தினர். தினகரன், மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவரான கமல், தனி அணியை உருவாக்க, காய் நகர்த்தி வருகிறார். இந்திய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி போன்றவற்றுடன் பேசி வருகிறார்.