
ஆதிக்கம் செலுத்தியவர்கள், தங்கள் அதிகாரம் பறிபோய்விட கூடாது என்று இறுதி வரை போராடுவார்கள். அந்த இறுதிக்கட்ட போராட்டத்தில்தான் இருக்கிறார் தினகரன்.
ஜெயலலிதா இருந்த வரை, கட்சியிலும் ஆட்சியிலும் ஆளுமை செலுத்தி வந்த சசிகலாவின் அரசியல் அதிகாரத்திற்கு, கிட்டத்தட்ட முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.
மத்திய அரசு சரம் சரமாக தொடுக்கும் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் நிலை குலைந்து போய் உள்ளார் தினகரன்.
மறுபக்கம், குடும்ப உறவுகள் அனைத்துமே, தமக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை அவர்.
தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கரின் நிலைதான் ஏற்படும் என்பது மற்ற அமைச்சர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே உணரப்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே, தினகரன் முன்னால் கைகட்டி நின்ற பல அமைச்சர்கள், அவரை பதவி விலக வலியுறுத்தி, கம்பு சுழற்றும் அளவுக்கு மாறி விட்டனர்.
அடுத்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதை தவிர, வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தனர் அமைச்சர்கள்.
இதற்கு, சசிகலா குடும்ப உறவுகளும் ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதை அடுத்தே, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத அதிமுக என்ற பன்னீரின், நிபந்தனைக்கு அமைச்சர்கள் அணி ஒப்புதல் அளித்தது.
இதனால், நிலைமை கைமீறி போய்விட்டது என்பதை உணர்ந்த தினகரன், அமைதியாகவே இருந்துள்ளார். ஆனாலும், இதை எப்படி சமாளிப்பது என்று தமது உறவினர்கள் சிலரிடம் ஆலோசனையும் கேட்டுள்ளார்.
ஆனால், நீதான் எல்லாம் தெரிந்தது போல, எங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, உன் இஷ்டத்திற்கு செயல்பட்டு இந்த நெருக்கடிக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டாய்.
இப்போது, எங்களை கேட்டால், நாங்கள் என்ன சொல்ல முடியும்?. அதையும் உன் விருப்பம் போல சமாளிக்க முயற்சி செய் என்று உறவுகள் காட்டமாக பேசியதாக கூறப்படுகிறது.
தமக்கு எதிராக அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் அணி திரளுவதை தடுக்க முடியாது என்று அமைதி காத்த தினகரனுக்கு, எங்கிருந்தோ ஒரு நம்பிக்கை தகவல் வந்துள்ளது.
அதன் பிறகே, வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ க்களை அழைத்து, ஊடகங்களிடம் பேச வைத்துள்ளார், இன்று மாலை எம்.எல்.ஏ கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த கூட்டத்தில், பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அவருக்கே நன்றாக தெரியும்.
இருந்தாலும், தமக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யார்? என்று அறிந்து கொள்ளவே, அவர் எம்.எல்.ஏ க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.