
தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிராக நோட்டீஸ் விநியோகித்த தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் உட்பட 10 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அரசுக்கும் எதிராக செயல்படும் தினகரன் ஆதரவாளர்களை, அதிகாரத்தைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி செவ்வனே செய்துவருகிறார்.
தனக்கும் அரசுக்கும் அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகரை வைத்து தகுதிநீக்கம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து செந்தில் பாலாஜி வீட்டில் சிபிஐ ரெய்டு, முன்னாள் அமைச்சர் பழனியப்பனை பயமுறுத்த போலீஸ் தேடுதல் வேட்டை என அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார் எடப்பாடி.
இந்நிலையில், தற்போது அரசுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக மக்களிடம் நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் எதிராக பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்ததாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
அரசுக்கும் தனக்கும் எதிராக தினகரன் ஆதரவாளர்களை எதையும் பேசவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அரசுக்கும் தனக்கும் எதிராக கருத்து கூற நினைப்பவர்களிடையே பயத்தை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற கைது நடவடிக்கைகள் என பேசப்படுகிறது.
தினகரனுக்கு ஆதரவாளர்கள் என யாருமே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தை காவல்துறையை பயன்படுத்தி நிறைவேற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதுபோன்ற அதிரடி கைது நடவடிக்கைகளால் தினகரன் ஆதரவாளர்கள் பீதியில் உள்ளனர். இன்னும் என்னென்ன அதிரடிகளையெல்லாம் எடப்பாடி காட்டப்போகிறார் என்ற பீதியும் தினகரன் ஆதரவாளர்களிடையே உருவாகியுள்ளது.