
நல்லா வச்சாங்க தேர்தல , ஏப்ரல் மாதத்தில் பிரச்சாரத்தில் நிற்க , நடக்க முடியாமல் என்னை விட்டுடுங்கன்னு தினகரன் கூறுகிறாராம். அப்படியெல்லாம் ஒதுங்க முடியாதுன்னு நிர்வாகிகள் சொல்ல தினகரனின் தயக்கத்தை பார்த்து சங்கடத்தில் இருக்கிறார்களாம் நிர்வாகிகள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை சுற்றி நின்றவர்களை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக தங்கள் எதிர்ப்பை காட்டமுடியாமல் திகைத்து நின்றனர். காரணம் ஜெயலலிதா யார் யாரை தன் வாழ்நாள் முழுதும் அருகில் சேர்க்காமல் தள்ளி வைத்திருந்தாரோ அத்தனை சொந்தங்களும் சுற்றி நின்றன.
இவர்களுக்கு ஒரே அச்சாணி சசிகலா. ஆனாலும் அதிமுக என்ற கட்சி உறுதியாக இருந்தது. ஜெ மறைந்த இரண்டு மூன்று நாட்கள் கழித்து மதுசூதனன் , செங்கோட்டையன் உள்ளிட்டோர் கார்டனில் சசிகலாவிடம் தலைமை பொறுப்பை ஏற்றுகொள்ள வேண்டும் என்று கெஞ்சியபோது பொதுமக்கள் அதை எதிர்ப்பு மனோ நிலையுடன் தான் பார்த்தனர்.
அதன் பின்னர் வேக வேகமாக நடந்த சம்பவங்கள் ஓபிஎஸ் அணி என்ற பிரம்மாண்ட பிளவாக போய் முடிந்தது. ஒரு மாதம் ஷோ காட்டிய சசிகலா சிறைவாசத்துக்கு போக கடைசி நேரத்தில் தினகரனை கட்சியில் இணைத்து அன்றே துணைப்பொதுச்செயலாளராகவும் ஆக்கினார் சசிகலா.
கட்சியும் ஆட்சியும் தங்கள் கையில் , தினகரன் என்ற திறமை மிக்கவர் தலைமை என்று கணக்கு போட்டனர் அதிமுக நிர்வாகிகள் ஆனால் மக்கள் ஆதரவு இல்லாவிட்டால் எத்தனை பெரிய திறமை இருந்தும் வீணாகும் என்பது தினகரன் வாழ்வில் நிருபணமானது.
கட்சி கையை விட்டு போகும் நிலை. சின்னம் முடக்கம் என அடுக்கடுக்கான சோதனைகளால் தினகரன் திணறுகரனாகி போனார். போதாத குறைக்கு அன்னிய செலவாணி மோசடி வழக்கு கழுத்தை நெரிக்க என்னதான் செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார் தினகரன்.
பிள்ளையார் பிடிக்க குரங்காய் போய் முடிய போகிறதோ என்ற தயக்கம் அவரை வாட்டுகிறது. தேர்தலில் தோற்றால் அரசியலில் சிக்கல். ஆனால் இப்போது உள்ள நிலையில் இரண்டாம் இடத்தை தக்க வைப்பதே பெரும்பாடாக இருப்பதால் பெரும் சோர்வில் இருக்கிறாராம்.
இதன் விளைவு பிரச்சாரத்தில் சோர்ந்து போகிறாராம். என்னை விட்டு விடுங்கள் என்னால் முடியவில்லை ஓய்வு எடுக்கிறேன் என்கிறாராம். ஆனால் நிர்வாகிகள் அதெல்லாம் முடியாது நீங்கள் தான் வேட்பாளர் நீங்களே வரவில்லை என்றால் அப்புறம் பிரச்சாரம் என்னாவது என்று வலுக்கட்டாயமாக அழைத்து செல்கிறார்களாம்.
உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் , நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் என்று மனதுக்குக்குள் பாடிக்கொண்டே ஓட்டு கேட்க போகிறாராம் தினகரன். அவரது நிலையை பார்த்து சங்கடத்தில் நெளிகிறார்கள் கட்சி நிர்வாகிகள்.