
ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் இருந்த போது டிடிவி தினகரன் கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தாலும் சற்று நிம்மதியுடனே காணப்பட்டார்.
சும்மா இருந்த நாயை சூ என்று சொல்லிவிட்டு போ என்ற கதையாய் சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா அவரது அக்காள் மகனான டிடிவி தினகரனை அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமித்து விட்டு சென்றார்.
அதில் ஆரம்பித்தது டிடிவிக்கு தலைவலி. அதுவரை பதவி ஆசை இல்லாமல் சுற்றி கொண்டிருந்த டிடிவிக்கு திடீரென பதவி மோகம் தலைக்கேறியது. அதனால் அவர் பல சித்து வேலைகளை மேற்கொண்டார்.
இதுகுறித்து ஒவ்வொன்றையும் நோட்டமிட்டு வந்த மத்தியில் ஆளும் அரசு தகுந்த நேரத்திற்காக காத்து கொண்டிருந்தது. இதனிடையே டிடிவி தினகரன் மத்திய அரசின் ஆதரவோடு திகழும் அதிமுக பிரிவு அணியை எதிர்த்து பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்தார்.
இதை பொறுத்துக்கொள்ளாத ஒ.பி.எஸ் தரப்பின் மறைமுக கூட்டணி டிடிவியை அடக்க தனது சித்து வேலைகளை ஆரம்பித்தது.
இதனால் சற்று அடங்கியிருந்த தினகரன் மீதான வழக்குகள் விஸ்வரூபம் கொண்டு வெளியே வந்தது. இது போதாது என்று பதவி மோகத்தில் அவசரப்பட்டு செய்த காரியங்களில் மாட்டிக்கொண்டும் சில வழக்குகள் அவரை பின் தொடருகின்றன.
தினகரனுக்கு கட்சி பிரச்சனையும் முடியவில்லை, வழக்கு பிரச்சனையும் தீரவில்லை என்ற கதியில் கதிகலங்கி போயுள்ளார்.
ஜெயலலிதா காலத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனே கோவிலுக்கு ஓடி போய் யாகம் நடத்தி விடுவார். தற்போது அதே பாணியை டிடிவியும் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளார்.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் மொரட்டாண்டி என்ற ஊர் உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பிரத்யங்கிரா காளியம்மன் கோயில் உள்ளது.
500 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் வாசலில் மிகவும் சக்தி வாய்ந்த காளியம்மன் 72 அடி உயரத்தில் தோற்றத்தில் இருக்கிறார்.
இங்கே செவ்வாய், பௌர்ணமி நாள்கள் இங்கே விசேஷம். மிளகாய் போட்டு பிரத்யங்கிரா தேவிக்கு ஹோமம் பண்ணிட்டு வந்தா, எல்லா தடைகளும் உடையும்” என்று இந்தக் கோயில் குறித்து தினகரனுக்கு அவரது ஜோதிடர்களும், குடும்பத்தினரும் சொன்னதால் கடந்த ஜூன் 13ஆம் தேதி காலை குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார் தினகரன்.
பிரச்னைகளைத் தீர்க்கும் பிரத்யங்கிரா தேவிக்குச் சிறப்பு பூஜைகள், மிளகாய் போட்டு சுமார் ஒருமணி நேரம் ஹோமம் நடத்திவிட்டு டெல்லி நெருக்கடிகள், உட்கட்சி பிரச்னைகள் என்று பல்வேறு பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்காகப் பயபக்தியுடன் சாமியை தரிசனம் செய்தார்.
நடை சாத்தும் இரவு 9 மணி வரை பிரத்யங்கிரா கோயிலில் இருந்த தினகரன், பின் அங்கிருந்து காரிலேயே சென்னை திரும்பினார்.