தொப்பி டூ குக்கர் டூ பரிசுப்பெட்டி..! இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது சின்னம்!

By Asianet TamilFirst Published Mar 29, 2019, 10:03 AM IST
Highlights

தேர்தலுக்கு தேர்தல் வெவ்வேறு சின்னத்துக்கு ஓட்டு கேட்கும் நிலைக்கு அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் ஆளாகியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டது. சசிகலா அணி ஒரு பிரிவாகவும் ஓ.பன்னீர்செல்வம் அணி ஒரு பிரிவாகச் செயல்பட்டது. 2017 ஏப்ரலில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அந்தத் தேர்தலில் சசிகலா - தினகரன் அணிக்கு தொப்பி சின்னத்தையும் ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை மின்விளக்கு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தினகரன் தொப்பியை அணிந்துகொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 
ஆனால், பண வினியோகம் காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்தானது. அதன்பிறகு சசிகலா - தினகரன் அணியில் அவர்கள் இருவரையும் ஒதுக்கிவைத்துவிட்டு எடப்பாடி தரப்பு ஓபிஎஸோடு சேர்ந்தது. ஒன்று சேர்ந்த அணிகளுக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால், தினகரன் தரப்பு தனியானது. அந்த வேளையில்தான் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டது. சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய தினகரன், தொப்பி சின்னத்தை மீண்டும் கேட்டார். ஆனால், தினகரனுக்கு குக்கர் சின்னத்தைதான் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவை வீழ்த்தி தினகரன் வெற்றிபெற்றார்.
அப்போது முதலே குக்கர் சின்னம் தினகரனின் சின்னமாகவே பார்க்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கு மீண்டும் குக்கர் சின்னத்தைப் பெற தினகரன் தரப்பு எவ்வளவோ சட்டப் போராட்டத்தை நடத்தியும் அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. இருந்தபோதும் நீண்டப் போராட்டத்துக்குப் பிறகு தினகரன் கட்சிக்கு தற்போது பரிசுப் பெட்டி வழங்கப்பட்டிருக்கிறது. தொப்பி, குக்கர் சின்னங்களுக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்த தினகரன், தற்போது மூன்றாவது சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்குக் கேட்டு பிரசாரம் செய்ய இருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளில் தினகரனின் 3-வது சின்னம்!  

click me!