
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி இரண்டும் விரைவில் ஒன்றாக இணைய உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை நாளை நடக்கும் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையில், கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கினால், இரு அணிகளும் இணைவது குறித்து பேசப்படும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து விலக்குவதாக அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத், எம்எல்ஏக்கள் தங்க தமிழ்செல்வம், வெற்றிவேல் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது கூட்டு சதி என்றும், அமைச்சர்களின் சதி செயல் என்றும் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், இன்று காலை எம்எல்ஏக்கள் இருவரும் சென்னை அடையாறில் உள்ள டிடிவி.தினகரன் வீட்டுக்கு சென்றனர். அங்கு சில மணிநேரம் ஆலோசனை நடத்திய அவர்கள், அங்கிருந்து தலைமை செயலகம் சென்றுள்ளனர். தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், பேசி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து விலக்கியது பற்றியும், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது குறித்து பேசப்படுவதாக கூறப்படுகிறது.