காட்டிக் கொடுத்து கதையை முடித்த தினகரன்! ஸ்கெட்ச் போட்டு ஒபிஎஸ்சை சாய்த்த சாமர்த்தியம்

By sathish kFirst Published Oct 10, 2018, 11:53 AM IST
Highlights

தினகரனுடனான சந்திப்பை அடுத்து ஓ.பி.எஸ்.  அரசியலில் பெரும்பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், பிரதமருடனான எடப்பாடியின் சந்திப்பால் அவரது நிலைமை அதளபாதாளத்துக்குப் போயிருப்பதாக ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களே கருதுகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். சசிகலா குடும்பத்தினர், அவரை வலுக்கட்டாயமாக, முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தனர். அவர்களை எதிர்த்து, பன்னீர்செல்வம், தர்மயுத்தம் துவக்கினார். சசிகலா அணி சார்பில், பழனிசாமி முதல்வரானார். அவர், சசிகலா குடும்பத்தை ஓரம் கட்டிவிட்டு, பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டார். பன்னீர்செல்வம், துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அனைத்து இடங்களிலும், பழனிசாமி தரப்பினர், அவருக்கு, 'செக்' வைத்தனர். இதனால், பன்னீரும், அவரது ஆதரவாளர்களும் புழுக்கத்தில் இருந்தனர். பன்னீருக்கு, கட்சியினரிடம் அதிக ஆதரவு இருப்பதும், பா.ஜ., மேலிடம் ஆதரித்ததும், பழனிசாமி தரப்பிற்கு நெருடலாகவே இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில், தர்மயுத்தம் நடந்த போது, பன்னீர்செல்வம், தன்னை சந்தித்ததாக, தினகரன்  போட்டுவாங்கினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பன்னீர் ஆதரவாளர்கள் அதை மறுத்தனர். ஆனால், 'சந்தித்தது உண்மை தான்' என, பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்டார். 'சந்திக்க வேண்டும் என வற்புறுத்தியதால், தினகரன் திருந்தியிருப்பார் என நினைத்து சந்தித்தேன். ஆனால், அவர் மாறவில்லை' என்றார், பன்னீர்செல்வம்.

இது, அவரது ஆதரவாளர்களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை, பழனிசாமி தரப்பினர், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். தினகரன் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்படி, பன்னீர்செல்வத்தை வற்புறுத்தியதே, பழனிசாமி தரப்பு தான் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பு விபரத்தை, டெல்லிக்கு தெரிவித்து, அங்கும், பன்னீர் மீதான பார்வையை மாற்றி விட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், டெல்லி சென்ற முதல்வர், தனியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார்.  அங்கு அரசு விவகாரத்துடன், அரசியல் விவகாரமும் பேசப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இது, பழனிசாமி ஆதரவாளர்களிடம் உற்சாகத்தையும், பன்னீர் ஆதரவாளர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பன்னீர் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது: தர்மயுத்தம் நடந்த போது, தினகரனை சந்தித்ததை, அரசியல் நாகரிகம் கருதி, பன்னீர் வெளியிடவில்லை. ஆனால், தினகரன், அதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி விட்டார். அதோடு, பன்னீர்செல்வத்தை, துரோகி என்கிறார். துரோகி என்றால், அவரை ஏன் தினகரன் சந்திக்க வேண்டும்?

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே, முதல்வர் பதவியை, பன்னீர் உதறினார். அந்த நேரத்தில், அவர் கையில் முழு அதிகாரமும் இருந்தது. ஆனாலும், சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு, பதவி விலகினார். துரோகியாக இருந்திருந்தால், தினகரனையும், அவரது சொந்தங்களையும், ஜெயிலுக்கு அனுப்பியிருக்கலாமே.

அடுத்த நபரை காலி செய்ய, எந்த நிலைக்கும் இறங்குபவர் என்பதை, இதன் மூலம், தினகரன் உணர்த்தி இருக்கிறார். அரசியலில், ரகசிய சந்திப்புகள் நடப்பது வழக்கமானது தான். இனி, தினகரனை சந்திக்க செல்வோர், பயத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இப்படிப்பட்ட நபரை, சந்தித்து விட்டோமோ என்ற விரக்தியில் தான், தற்போது, பன்னீர்செல்வம் உள்ளார். பன்னீர்செல்வத்தை காட்டிக்கொடுத்ததால் நஷ்டம் அடைந்திருப்பது தினகரன்தான். இனி யாரும் எக்காரணம் கொண்டும் அவரை சந்திக்கத் தயங்குவார்கள்.

 எடப்பாடி பிரதமரை சந்தித்ததால், பன்னீரின் கதையே முடிந்துவிட்டதுபோல்  கதை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை. அரசு விவகாரம் தொடர்பாக, பிரதமரை முதல்வர் சந்திப்பதில் தவறில்லை. ஆனால், கட்சி கூட்டணி குறித்து பேசுவதாக இருந்தால், கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், பன்னீர்செல்வத்தை அழைத்து சென்றிருக்க வேண்டும். பிரதமருடனான சந்திப்பில், கூட்டணி குறித்து பேசப்பட்டதா என்பது, முழுமையாக தெரியாததால், தற்போதைக்கு, எதுவும் கூற இயலாது இவ்வாறு அவர்கள் கூறினர்.

அ.தி.மு.க.வின் குழப்பங்கள் இப்படி நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்க, உண்மையான நிலை என்ன என்பது எடப்பாடியாரின் எதிரே அமர்ந்து எகத்தாளச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துக்கொண்டிருந்தாரே அந்த மோடி மஸ்தானுக்கே தெரியும்.

click me!