
துரோகம் செய்த சிலர், இப்போதாவது துரோகத்தை உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் துரோகத்தின் சின்னமாக அவர்கள் திகழ்வார்கள் என தினகரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், தலைமை செயலகத்தில் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார். சபாநாயகர் தனபால், தினகரனுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு எனக்கு வாக்களியுங்கள் என ஆர்.கே.நகர் மக்களிடம் வாக்கு கேட்டேன். அதை ஏற்ற ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். ஆர்.கே.நகர் வெற்றியின் மூலம் தொண்டர்களும் மக்களும் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.
ஆர்.கே.நகர் தோல்வியை ஒரு தொகுதியின் தோல்விதானே என ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்துவிடாமல், செய்த துரோகத்தை உணர்ந்து திருந்த முயற்சி செய்யுங்கள். துரோகம் செய்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது. 5,6 பேர் இருக்கிறார்கள். அவர்களின் தவறான எண்ணங்களால், மாபெரும் இயக்கம் பெரும் சோதனையை சந்தித்து வருகிறது. அதனால்தான் ஆர்.கே.நகர் மக்கள் நல்ல பாடம் புகட்டியிருக்கிறார்கள். மனதளவில் எங்களுடன் இருக்கும் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், மனதிற்கு தெரிந்தும் பதவியை காப்பாற்றி கொள்வதற்காக உங்களுடன் இருக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு சுய பரிசோதனை செய்யுங்கள்.
சசிகலா தலைமையில் செயல்படுவதுதான் உண்மையான அதிமுக. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். வருங்காலத்தில் சரித்திரத்தில் நல்ல பெயரை எடுக்க பாருங்கள். கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தியவர்களே மற்றவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்கள். ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல், எதை எதையோ செய்கிறார்கள். கட்சியிலிருந்து நீக்குவதன் மூலம் யாரையும் பயமுறுத்த முடியாது. செய்த தவறுகளை உணர்ந்து அவர்களாகவே ஆட்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டு, சரித்திரத்தில் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்யுங்கள். இனியும் திருந்தவில்லை என்றால், எதிர்காலத்தில் துரோகத்திற்கான எம்பளம் என்று ஒன்று உருவாக்கினால், அதில் உங்களது படங்கள்தான் இடம்பெறும் என தினகரன் காட்டமாக விமர்சித்தார்.