
89 எம்.எல்.ஏக்களை கொண்ட வலுவான எதிர்க்கட்சியாக திகழும் திமுக, சட்டசபைக்குள் இருந்து அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க தவறுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பல தருணங்களில் சட்டசபைக்குள் சென்றதும் உடனடியாக திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை தொடங்கியதுமே திமுக எம்.எல்.ஏக்கல் வெளிநடப்பு செய்தனர். மைனாரிட்டி அரசுக்கு ஆளுநர் ஆதரவளிப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என குற்றம்சாட்டி, திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், கூட்டத்தை முழுமையாக முடித்துவிட்டு வெளியேவந்த தினகரன், ஆளுநர் உரையின் குறைகளையும், அவற்றில் விடுபட்ட மக்கள் பிரச்னைகளையும் லிஸ்ட் போட்டு அசத்தினார். அதேநேரத்தில் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளையும் தினகரன் முன்வைக்க தவறவில்லை. முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் சென்ற தினகரன் தனியாக அமரவைக்கப்பட்டார். ஆளுநர் உரையை முழுவதுமாக மிகக் கவனமாக கவனித்த தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சுயேட்சையான தினகரனே இவ்வளவு ஆராய்ந்து விமர்சிக்கும்போது, வலுவான எதிர்க்கட்சியான திமுக, அரசியலைக் கடந்து மக்கள் பிரச்னைகள் தொடர்பாகவும் ஆளுநர் உரையை நன்கு ஆராய்ந்து விமர்சித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய திமுக தவறிவிட்டது என்றே கூறவேண்டும். ஆர்.கே.நகரில் மட்டுமின்றி ஆட்சியின் மீதான விமர்சனங்களை காரண காரியத்தோடு முன்வைப்பதிலும் தினகரனிடம் திமுக தோற்றுவிட்டது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான கடந்த ஓராண்டு காலத்தில் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், அந்தர் பல்டிகள், அலட்சியங்கள் ஆகியவற்றால் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் மீதான அதிருப்தியை ஆர்.கே.நகரில் அறுவடை செய்ய திமுக தவறிவிட்டது. மாறாக கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளில் பாதியைத்தான் இந்த இடைத்தேர்தலில் பெற்றது. ஆர்.கே.நகரில் களத்தில் இறங்கி திமுக வேலை செய்யவில்லை என்பது அப்பட்டமாக வெளியே தெரிந்த விஷயம். அந்தளவிற்கு திமுகவிற்கு அலட்சியம். இனிமேல் நாம்தான்.. நம்மை விட்டால் யாருமில்லை என்ற திமுகவின் எண்ணத்திற்கு சிம்ம சொப்பனமாக வளர்ந்து நிற்கிறார் தினகரன். குக்கர் என்ற சின்னத்தை மிகக்குறுகிய காலத்தில் ஆர்.கே.நகர் மக்களிடத்தில் கொண்டு சேர்த்து அபார வெற்றியை பதிவு செய்தார் தினகரன்.
எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் களத்தில் இறங்கி வேலை பார்த்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலிருந்து திமுக தலைமை கற்றுக்கொண்டிருக்கும்.
தேர்தலை அணுகும் முறை, களப்பணி, அரசின் செயல்பாடுகளை விமர்சித்தல் ஆகிய விஷயங்களில் தினகரன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பிரதான எதிர்க்கட்சியான திமுகவை விட, அரசுக்கு எதிராக தினகரன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.
தேர்தலை அணுகும் முறை, களப்பணி, அரசின் செயல்பாடுகளை விமர்சித்தல் ஆகியவற்றோடு சேர்த்து, முறையான காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் உரையை எதிர்த்தது வரை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் ஆட்சியாளர்களின் மீதான எதிர்ப்புகளை அறுவடை செய்வதிலும் திமுகவைவிட தினகரன் சிறப்பாக செயல்படுகிறார் என்றே கூற வேண்டும்.