
நம் மீதும் வருமான வரித்துறை சோதனை பாயுமோ என்ற பயத்தில் மத்திய அரசுக்கு முதல்வரும் அமைச்சர்களும் துதிபாடுவதாக தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இதனைத் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியவுடன், அதுமாதிரியான சோதனைகள் நம் மீதும் பாய்ந்துவிடுமோ என்ற பயத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என இவையனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவற்றை ஏவிவிட்டு சோதனை நடத்தப்படுமோ என்ற பீதியில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மத்திய அரசுக்கு ஆட்சியாளர்கள் துதிபாடுகிறார்கள்.
பயத்தில் கடவுளின் நாமத்தை சொல்வதைப் போல, சுயபயத்தால் ஆட்சியாளர்கள் மோடியின் பெயரை நாமமாக உச்சரிக்கின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி இருக்கும்வரை பயம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியதுபோல, வயிற்றுப் பிழைப்புக்காக வாயில் வந்ததை பேசியிருப்பார்.
இவ்வாறு தினகரன் முதல்வர் மற்றும அமைச்சர்களை விமர்சித்து பேசினார்.