
தான் ஒரு 420 என தினகரனே கூறியிருப்பதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் தினகரனிடம் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் படுதோல்வி அடைந்தார். தோல்வி குறித்தும் கட்சியின் நிர்வாகிகள் சிலர் தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணியாற்றியதாக பரவிய தகவல் தொடர்பாகவும் விவாதிக்க அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், துரோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவும் தினகரனும் கூட்டணி சேர்ந்து அதிமுகவை வீழ்த்த நினைத்தனர். ஆனால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. என்னை கட்சியில் வளர்த்துவிட்டது தினகரன் தான் என அவர் கூறுகிறார். அவர் கூறுவது அனைத்துமே பொய்தான்.
1980ம் ஆண்டிலிருந்து நான் கட்சியில் இருக்கிறேன். வார்டு செயலாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் வரை உயர்ந்து பின்னர் ஜெயலலிதா சீட் வழங்கியதால் எம்.எல்.ஏவாகி, அமைச்சரானேன். ஆனால் தினகரன் 1998ல் தான் மக்களவை தேர்தலில் நின்றார். தினகரனைவிட 18 ஆண்டுகள் அரசியலில் நான் சீனியர். ஆனால் அவர் என்னை அரசியலில் வளர்த்துவிட்டதாக தினகரன் கூறுகிறார்.
தினகரன் கூறுவது எல்லாமே பொய்தான். அந்தந்த நேரத்தில் என்ன தேவையோ அதை பேசிவிட்டு போகிறவர்தான் தினகரன். சாதாரணமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போதுகூட, என் ஒரு முகத்தை தான் பார்த்திருக்கிறீர்கள். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதை தேவைப்படும்போது நான் காட்டுவேன் என தினகரன் என்னிடமே கூறியிருக்கிறார். அதேபோல, தான் ஒரு 420 என்பதை தினகரனே ஏற்கனவே கூறியிருக்கிறார் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.