
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. இதனால் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக சசிகலா ஆதரவாளர் டி.டி.வி.தினரகன், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வதாக, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரில், பிரச்சாரத்தின்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.1000 கொடுத்த கருணாமூர்த்தி என்பவரை பறக்கும் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அதேபோல், டி.டிவி.தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர், நேற்று அதிகாலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், வீடு வீடாக சென்று வெள்ளி காமாட்சி அம்மன் விளக்குகளை கொடுத்து கொண்டு வந்தனர்.
அவர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார், ஒரு மொபட், ஏராளமான வெள்ளி காமாட்சி அம்மன் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் உள்பட 2 பேர் என்றும், ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரை சேர்ந்த சிவகுமார் என்றும் தெரியவந்தது.
மேலும், வெள்ளி விளக்குகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட கார் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு சொந்தமானது என்றும், அவரது தலைமையில் வினியோகம் செய்யப்பட்டது என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தெரியவந்தது.
இந்நிலையில், இன்று காலை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், சிலர் தொப்பி அணிந்து கொண்டு 38 வது வட்டம் சுந்தரம்பிள்ளை நகரில், புடவை, தொப்பி, பணம், பட்டுவாடா, வீடு வீடுடாக வழங்கி வருகின்றனர். இதனை சிலர், புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து எதிர்க்கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளனர்.