
ராமநவமி அன்று ராமர் புகழ்பாடும் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றியிருக்கிறது திமுக அரசு என்றும், தொடர்ந்து பெரும்பான்மை சமூகத்தை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற மன நிலையில் அது செயல் பட்டு வருகிறது என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அயோத்தியா மண்டபம் என்று ஒன்று உள்ளது. கடந்த 1054 ஆம் ஆண்டு அது கட்டப்பட்டது ராம சமாஜம் என்ற அமைப்பு அதை நிர்வகித்து வரும் நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுத்தது. ஆனால் அதை எதிர்த்து ராம சமாஜம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. மண்டபத்தில் உள்ளே ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருவதால் அங்கு ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். அங்கு சிலை வைத்து வழிபாடு நடப்பதால் அதை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்தது.
இதனால் நீதிமன்றம் ராம சமாஜம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரத்து செய்தது. இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மண்டபத்தில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக மண்டபத்துக்கு சென்றனர். ஆனால் அங்கே பாஜகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது போலீசார் அவர்களை கலைத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் போலீசார் அயோத்தியா மண்டபம் முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். அதற்கான தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்பது நம் பண்டைத் தமிழரின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், வழிமுறைகளையும் பேணிக் காப்பதற்கா அல்லது குழிதோண்டி புதைப்பதற்கா என்ற பெரும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. இன்று மேற்கு மாம்பலத்தில் உள்ள புகழ்பெற்ற பஜனை மற்றும் பிரசங்க மண்டபமாக அயோத்தியா மண்டபத்தை காவல்துறையினரின் கடுமையான அடக்கு முறையை செயல்படுத்தி கைப்பற்றி பூட்டுப் போட்டுள்ளனர்.
பகவான் ராமரின் பெயரால் பஜனைகள் நடைபெறும் அயோத்திய மண்டபத்தை கைப்பற்றி இனி அங்கே சத்சங்கங்களும், கூட்டங்களும், பஜனைகளும் நடைபெறாமல் தடுப்பதில் திமுக அரசு அதிக அக்கறை காட்டி, காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ் மக்களின் மனதை எல்லாம் புண்படுத்த வேண்டும், பெரும்பான்மை சமுதாய மக்களை பெரும் பதட்டத்தில் வைத்திரிக்க வேண்டும் என்ற மனோபாவத்தில் ராமநவமி அன்று ராமர் புகழ்பாடும் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றியிருக்கிறது திமுக அரசு. இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள், பழந்தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளை கொச்சைப்படுத்துவதை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கோவில்களை கடந்து பஜனைகள் சத்சங்கங்கள் கூட்டங்கள் மூலம் பக்தியை பரப்பும் மண்டபங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். இந்து அறநிலைத்துறையின் சட்டப்படி கடவுள்களின் திருவுருவ சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும் இடங்களில் மட்டும்தான் அறநிலைத்துறை சட்டம் செல்லுபடியாகும். அவற்றை கையகப்படுத்த முடியும். அயோத்தியா மண்டபத்தில் இறைவன் திருமேனி சிலை கூட இருக்கவில்லை, ஆகவே அரசின் இந்த நடவடிக்கையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என அண்ணாமலை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.