கோவை மாநகராட்சி கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானத்தின் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர்.
அப்போது பேசிய அதிமுகவை சேர்ந்த பிரபாகரன், 'இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முந்தைய ஆட்சியில், 50 சதவீதம் வரி உயர்வுக்கே கடுமையான போராட்டங்கள் நடந்தன. இப்போது 100 சதவீதம் உயர்த்துகிறீர்கள். இது வரி உயர்வு அல்ல, வரித்திணிப்பு. இதை தாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை. வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று பேசினார்.
undefined
அவரது பேச்சுக்கு, திமுகவை சேர்ந்த மத்திய மண்டல தலைவர் மீனா லோகு ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் பிரபாகரனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக கவுன்சிலர் கோவை பாபு, பிரபாகரன் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மற்ற கவுன்சிலர்கள், இருவரையும் தடுக்க முயற்சித்தனர். கடும் கூச்சல் குழப்பமும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இதையடுத்து, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி, அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா வெளியேறினர்.
பிரபாகரன், மாநகராட்சி தீர்மான நகலை கிழித்து எறிந்தார்.திமுக மாமன்ற உறுப்பினர்கள், பிரபாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, இரண்டு கூட்டங்களுக்கு அதிமுக மாமன்ற உறுப்பினரை சஸ்பெண்ட் செய்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் உத்திரவிட்டார். மேலும், கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.