சந்தேகம் தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி மீது வழக்குப் போட்டீங்களா.? மாரிதாஸ் வழக்கில் நீதிமன்றம் கேட்ட கேள்வி!

Published : Dec 13, 2021, 10:25 PM IST
சந்தேகம் தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி மீது வழக்குப் போட்டீங்களா.? மாரிதாஸ் வழக்கில் நீதிமன்றம் கேட்ட கேள்வி!

சுருக்கம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டதே?” என கேள்வி எழுப்பினார்.

தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி மாரிதாஸ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அதையொட்டி தமிழக அரசை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார் தீவிர வலதுசாரி ஆதரவாளரும் யூடியூபராருமான மாரிதாஸ். இதுதொடர்பாக அவர் மீது அளிக்கப்பட்டப் புகாரில் மதுரை போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாரிதாஸ் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜரானார். அவர் வாதிடுகையில், “மனுதாரரின் ட்விட்டரில் 2 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் ராணுவ தளபதி இறப்பு குறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில் திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை உள்ளது. இது, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது. எந்த அடிப்படையில், எந்த ஆதாரத்தில் இவர் இப்படி பதிவு செய்துள்ளார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். விசாரணைக்கு பிறகுதான் இவருடைய பின்புலம் தெரியும். இவருடைய பல பதிவுகள் சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் விதத்திலும் தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது. எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்று வாதிட்டார். 
 
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டதே?” என கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, “இவருடைய பதிவுகளை பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ன நினைப்பார்கள்? தமிழகத்தின் நேர்மைத்தன்மையை மாரிதாஸ் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். மனுதாரர், ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவர் தமிழக அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த பதிவை செய்துள்ளார்' வாதிடப்பட்டது. “முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
மாரிதாசின் வழக்கறிஞர் வாதிடுகையில், "இந்த வழக்கு உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளது. மனுதாரர் எந்த உள்நோக்கத்துடனும் இப்படி பதிவிடவில்லை. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார். இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்த பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர் புகழ் காந்தி ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க கால அவகாசம் கோரினார். இதை ஏற்று வழக்கு விசாரணை நாளை வரை நீதிபதி ஒத்திவைத்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!