ஸ்டாலின் குடும்ப மருமகனை போலீஸிடமிருந்து காப்பாற்றினாரா எடப்பாடியார்?: றெக்கை கட்டும் புது பஞ்சாயத்து..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2019, 6:48 PM IST
Highlights

ஸ்டாலினின் சொந்த மகனில்லை. அவரது அக்கா செல்வியின் மருமகன். அந்த வகையில் ஸ்டாலினுக்கு அவர் மகன் தானே!  விவகாரம் இதுதான்....
சமீபத்தில் செல்வியும், அவரது கணவர் முரசொலி செல்வமும் தங்கள் மருமகன் ஜோதிமணியின் செயல்பாடுகளுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்று ஒரு பொது அறிவிப்பை கொடுத்திருந்தனர். அதாவது செல்வியின் மகள் எழிலரசியின் கணவர்தான் இந்த ஜோதிமணி.

தி.மு.க.வை அ.தி.மு.க. ‘எதிர் கட்சி மட்டுமல்ல, எதிரிக் கட்சியும் கூட!’ என்று வெறுப்பாய் பார்த்த காலமெல்லாம் ஜெயலலிதாவோடு முடிந்தது. இப்போது என்னதான் வெளியில் முறைத்துக் கொண்டாலும் கூட இரு கட்சிகளின் முக்கிய புள்ளிகளும் திரை மறைவில் முழு நட்புடன் தான் இருக்கிறார்கள்!:  என்று கடந்த சில காலமாகவே பெரும் விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ஸ்டாலினின் மகன் விவகாரத்தில் இந்த விமர்சனம் உண்மையே! என்பது போல் ஒரு செய்தி றெக்கை கட்டியிருக்கிறது. ஸ்டாலினின் சொந்த மகனில்லை. அவரது அக்கா செல்வியின் மருமகன். அந்த வகையில் ஸ்டாலினுக்கு அவர் மகன் தானே! 

விவகாரம் இதுதான்....சமீபத்தில் செல்வியும், அவரது கணவர் முரசொலி செல்வமும் தங்கள் மருமகன் ஜோதிமணியின் செயல்பாடுகளுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்று ஒரு பொது அறிவிப்பை கொடுத்திருந்தனர். அதாவது செல்வியின் மகள் எழிலரசியின் கணவர்தான் இந்த ஜோதிமணி. இவரொரு டாக்டர். திடீரென மருமகன் மீது என்ன கோபம், அவர் என்ன செய்துவிட்டார், ஏன் இந்த அறிவிப்பு? என்று தமிழக அரசியலரங்கிலும், போலீஸ் வட்டாரத்திலும் பரபரப்பு கிளம்பியது. இது பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கும் பிரபல தமிழ் புலனாய்வு புத்தகம் ஒன்று சொல்லியிருக்கும் பரபர தகவல்களின் ஹைலைட் பாயிண்ட்ஸ் இதோ....

*வேலூரை சேர்ந்த தமான் என்பவர், சென்னை வேப்பேரியை சேர்ந்த  தினேஷ் என்பவரிடம்  ‘என் நண்பர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு நூறு ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ளார். அதை ரெண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக மாற்ற முயல்கிறார். எண்பது லட்சம் கொடுத்தால் போதும், ஒரு கோடிக்கு நூறு ரூபாய் தருவார்.’ என்று சொல்லியிருக்கிறார். இருபது லட்சத்துக்கு ஆசைப்பட்டு, தமான் சொன்ன நீலாங்கரை பங்களாவுக்கு எண்பது லட்சத்துடன் சென்றிருக்கிறார்  தினேஷ். பணத்தை வாங்கிக் கொண்டு சட்டென்று பின் பக்கம் வழியாக எஸ்கேப் ஆகிவிட்டனர் தமான் டீமினர். அதில் ஒருவர் மட்டும் தினேஷிடம் மாட்டினார். அவர்தான் கருணாநிதியின் மகளான செல்வியின் மருமகன் ஜோதிமணி. நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஜோதிமணியை ஒப்படைத்துவிட்டு புகார் கொடுத்தார் தினேஷ். 

*விஷயம் செல்விக்கு சென்று, பின் ஸ்டாலினுக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின் சென்னையை சேர்ந்த  மிக முக்கியமான தி.மு.க. மாவட்ட செயலாளர் ஒருவர் மூலமாக முதல்வர் எடப்பாடியாரிடம் பேசி, அவரிடம் கோரிக்கை வைத்து காம்ப்ரமைஸ் பண்ணியுள்ளனர். விளைவு, ஜோதிமணியை விடுவித்துவிட்டனர். ஆனால் பணத்தை இழந்த தினேஷ் அழுது நின்றார். 

*கைதாவதில் இருந்து ஜோதிமணி அப்போதைக்கு எஸ்கேப் ஆகிவிட்டாலும் கூட, இது எதிர்காலத்தில் பெரியளவில் சிக்கலாகலாம் என்பதாலேயே, வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செல்வியும், அவரது கணவர் செல்வமும் சேர்ந்து அந்த பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்... என்று நீள்கிறது அந்த செய்தி. 

இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க, இதை வைத்து அ.தி.மு.க.வினுள் ஒரு புது பரபரப்பு வெடித்துள்ளது. அதாவது இ.பி.எஸ். ஏன் ஸ்டாலினின் குடும்பத்துக்கு உதவினார்? என்று. ஆட்சியையும், கட்சியையும் அழிக்க ஸ்டாலின் எவ்வளவோ துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இ.பி.எஸ். இப்படி செய்தது என்ன நியாயம்? கழகத்தை கேவலமாக விமர்சிக்கும் ஸ்டாலினை வாயை மூட வைக்க ஜோதிமணியை  கைது செய்து, அதை பிரபலப்படுத்தியிருக்க வேண்டும்! அதை செய்யாமல் விட்டது ஏன்? என்று பொங்குகின்றனர். ஆனால் தி.மு.க.வினரோ, இ.பி.எஸ்.ஸிடம் பேசித்தான் ஜோதிமணியை விடுவிக்க வைத்தனர் என்று சொல்லப்படுவதை மறுக்கின்றனர். ‘இந்த சிக்கலை, வழக்கை ஜோதிமணி எதிர்கொள்ளட்டும். அதற்காகத்தான் செல்வி, செல்வம் தம்பதியர் இதிலிருந்து விலகி நிற்கின்றனர். இதில் மறைக்க ஒன்றுமே இல்லை. அதனால்தான் ஓப்பனாக செய்தித்தாளில் விளம்பரம் செய்துள்ளனர்.’ என்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்போ தொடர்ந்து அதை மறுக்கிறது. இதையெல்லாம் கேட்டு முடிச்ச பிறகு கடைசியில நமக்கு தோணுற டயலாக்....’அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!’ என்பதுதானே!? அதான்! அதேதான். 
 

click me!