தப்பித்தார்களா அதிமுக விஐபிகள்..? பாஷ்யம் கோயம்பேடு பெயர்ப்பலகை அதிரடி நீக்கம்... அப்போ அந்த ரூ.500 கோடி..?

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2021, 2:29 PM IST
Highlights

கோயம்பேடு மெட்ரோ என்று மீண்டும் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. அப்படியானால் பெயர் மாற்றத்தோடு முடிந்து விடுமா பாஷ்யம் விவகாரம்..?

அதிமுக ஆட்சியில், கடந்த ஜனவரி மாதம், 3ம் தேதி இரவோடு இரவாக கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் மேம்பாலங்களில் ’பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’என பெயர் மாற்றப்பட்டு எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அப்போது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய மேம்பாலங்களில் இந்த பெயர் திடீரென வைக்கப்பட்டதற்கு காராணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசியல் கட்சிகள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டன. மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அரசின் விதிமுறைகளுக்கு முரணாக அவசர அவசரமாக அரசு நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனத்துக்கு தாரை வார்த்துள்ளதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது கூட்டுச் சதி, ஊழல், லஞ்சம் பெற்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் புகார் மனுவே அளித்திருந்தார். சென்னை, கோயம்பேட்டை ஒட்டி இருக்கும் அமைந்தகரை தாலுகா, பூந்தமல்லி சாலை, டி.எஸ்.எண் 9-19, பிளாக் எண்-35, கோயம்பேட்டில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கு மிகமிக குறைந்த விலையில், அதாவது ஒரு சதுர அடி ரூ.12,500 என்ற விலையில் விற்பனை செய்து தமிழக அரசு கடந்த பிப்ரவரி 8ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வந்துவிடும் என்பதால் அவசர அவசரமாக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு சிஎம்ஏடிஏவிடம் அவசரமாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலில் அரசு நிலங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்போது அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தனிப்பட்ட நபருக்கு உதவும் வகையில், லாபம் அடையும் நோக்கில் இருந்துவிடக்கூடாது என்று கூறப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலுக்கு மாறாக அரசு நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தராமல் தனிப்பட்ட ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அப்போதைய  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் கூட்டுச் சதி இதில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. 

அரசு நிலத்தை உள்ளாட்சி அமைப்புகள், துணை மின் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், மருத்துவமனைகள், சாலைகள், மார்க்கெட்டுகள் போன்ற பொதுப் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், தனி நபர் ஆதாயத்திற்காக அரசு நிலம் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்ப்தாக குற்றம்சாட்டப்பட்டது. பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் ரூ.1,557 கோடி மதிப்பீட்டில் வர்த்தக மையம் மற்றும்  குடியிருப்புகளை கட்டி வருகிறது. இந்த கட்டுமானங்கள் நடைமுறைக்கு வந்தால் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால், குடியிருப்புகளை கட்டுவதால் 7500 பேருக்கு எப்படி வேலை தரமுடியும்.

இந்த இடத்தில் 2,078 குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாகவும் 2,557 சதுர அடியில் 4 பெட்ரூம் பிளாட்டுகள் ஒரு சதுர அடி ரூ.11 ஆயிரம் விலையில் விற்பனைக்கு உள்ளாகவும் அந்த நிறுவனம் தொடர்ந்து விளம்பரம் செய்து வந்தது. அரசு நிலத்தில் கட்டுமானங்களை எழுப்பி அதை ரியல் எஸ்டேட் வணிகத்துக்கு கொண்டு சென்றிருப்பது சட்டத்திற்கு விரோதமானது. இந்த மோசடியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சர்ச்சை வெடித்தது.  விஜயந்த் டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் முகவரியில் பதிவு செய்யப்பட்ட காரில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார். விஜயந்த் டெவலப்பர்ஸ் மற்றும் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கும் சம்மந்தம் உள்ளது என்றும் கூறப்பட்டது. 

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் சந்தை மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.25 ஆயிரம். ஆனால், ஒரு சதுர அடி ரூ.12,500 விலையில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் உள்ள இடங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் தனியார் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் அரசு நிலத்தை கொடுத்து ரியல் எஸ்டேட் விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அரசு நிலத்தை விதிமுறைகளுக்கு முரணாக தனிப்பட்ட ஆதாயத்தை பெறுவதற்காக அவசர அவசரமாக சிஎம்டிஏ அனுமதி பெற்றதாகவும் புகார் எழுந்தது. 

சிஎம்டிஏவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை வைத்திருக்கும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து அரசு நிலத்தை பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் விற்பனை செய்துள்ளதாக புகார் கிளம்பின.

 

ஆனால், ‘பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா 1932-ம் ஆண்டில் வெள்ளையன் ஆட்சியில் தனி ஆளாக சென்னை கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றியவர் என்றும், அவரின் நினைவாக கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு பெயர் மாற்றப்பட்டு உள்ளது’’ என அதிமுக சமாளிக்கப்பார்த்தது. ஆனால் சர்ச்சை ஓயாததால், ’’ரயில் நிலையத்துடன் நிறுவனத்தின் பெயரை சேர்த்து விளம்பரம் செய்யும் உரிமை (செமி நேமிங் உரிமம்) கிடைத்தது. அதாவது. கோயம்பேடு நிலையத்திற்கான செமி நேமிங் உரிமத்திற்கான ஒப்பந்ததை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் பெற்றது. அதனால் பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது’’என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் அப்போது விளக்கம் அளித்தார்கள். அந்த சர்ச்சை அப்போது தற்காலிக முடிவுக்கு வந்தது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த மாதம் பாஷ்யம் கன்ஸ்ஹ்ட்ரக்சன் நிறுவனத்தின் இயக்குநர்களான அபினேஷ் யுவராஜ், பாஷ்யம் யுவராஜ் ஆகிய இருவரும், உதயநிதி ஸ்டாலினுடன் தலைமை செயலகம் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 ருகோடியை நன்கொடையாக அளித்தன. 

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் மீண்டும் புணரமைக்கப்பட்டது. புணரமைக்கப்பட்ட பின்னர் " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " என்ற பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ என்று மீண்டும் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது. அப்படியானால் பெயர் மாற்றத்தோடு முடிந்து விடுமா பாஷ்யம் விவகாரம்..?

click me!