
திவாகரனுக்கு சொந்தமான மகளிர் கல்லூரியில் சோதனை நடத்த வருமான வரி அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து திவாகரனின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 147 இடங்களில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
போலி நிறுவனங்கள் நடத்தி நஷ்ட கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 40 இடங்களில் சோதனை முடிந்துவிட்ட நிலையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இரண்டாவது நாளான இன்று 147 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மன்னார்குடியில் உள்ள திவாகரனின் வீடு, அவரது பண்ணை வீடு, அவரது நண்பர்களின் வீடு என மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் வளைத்து வளைத்து சோதனை நடத்துகிறது வருமான வரித்துறை.
மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். நேற்றிரவு இந்த கல்லூரியின் மாணவிகள் விடுதியில் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதற்கு மாணவிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் வந்தனர். அதிகாரிகளை கல்லூரிக்குள் செல்ல திவாகரன் ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை. கல்லூரி வாயிலில் குழுமியிருந்த நூற்றுக்கும் அதிகமான திவாகரன் ஆதரவாளர்கள் அதிகாரிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் வரும் கார்களில் பெரிய பைகளை(bags) எடுத்துவருவதாகவும் அவற்றையும் கல்லூரிக்குள் அவர்களே எடுத்து செல்வதாகவும் திவாகரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் கொண்டுவரும் பைகளை சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கார்களை அனுமதிக்க மறுத்ததனர்.
இதையடுத்து அதிகாரிகளை அனுமதிக்க மறுத்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசியின் மகன் விவேக்கின் வீட்டு வாசலில் இருந்த அவரது ஆதரவாளர்களும் அதிகாரிகள் பெரிய பைகளை எடுத்து செல்வதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.