ஆளுங்கட்சிக்கு காவடி தூக்கி.. ஜால்ரா அடிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. ஆளுநரை விமர்சிப்பதா? தேவநாதன் யாதவ்

By vinoth kumarFirst Published Nov 1, 2022, 3:48 PM IST
Highlights

தமிழக ஆளுநராக மேதகு ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பின் ஆளும் திமுக அரசின் பொய் தோற்றத்தை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டி வருகிறார். குறிப்பாக நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தொன்மையையும் மீட்டு வருகிறார்.

திமுகவின் எண்ணத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் ஆளுநரை திமுக தனது கூட்டணி கட்சிகளை ஏவி ஆளுநர் குறித்து வசைபாட வைக்கிறது என்பது மக்களுக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது என தேவநாதன் யாதவ் கூறியுள்ளார். 

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- காங்கிரஸ் கட்சி நாட்டை ஆளும் போது ஆளுநர்கள் ஆளுங்கட்சிக்கு சாமரம் வீசியும் தலையாட்டி பொம்மையாகவும் ஆட்டுவிக்கப்பட்டார்கள். பல மாநிலங்களில் ஆளுநர் மாளிகைப்பணி செய்தார்களே தவிர மக்கள் பணியை செய்ததில்லை. ஆனால் தற்போது மக்கள் விரும்பிய பாஜகவின் ஜனநாயக ஆட்சி அமைந்த பிறகு நியமிக்கப்பட்ட ஆளுநர்கள், ஆளும்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும் கண்டித்தும் நேர்மையான முறையில் நடந்து கொள்கின்றனர். 

இது பல கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது. தமிழக ஆளுநராக மேதகு ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பின் ஆளும் திமுக அரசின் பொய் தோற்றத்தை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டி வருகிறார். குறிப்பாக நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தொன்மையையும் மீட்டு வருகிறார். ஆளுநரின் கருத்துகள் அனைத்தும் ஆபத்தானவை அபத்தமானவை என திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். உண்மையிலேயே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்தானவை அபத்தமானவை.

ஆளுநரின் கருத்துகளை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆளுநர் என்பவர் ஆளுகின்ற கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது விதியல்ல. ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறார். திமுக கொள்கைகளை ஏற்காமல் நேர்மையாக செயல்படுகிறார் என்பதற்காக ஆளுநர் பதவியில் இருப்பவரை கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது கண்டனத்திற்குரியது. தமிழின் வரலாறும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. ஆன்மீகத்தின் துவக்கம் இல்லாமல் தமிழின் வரலாறு தொடங்க முடியாது. தமிழின் துவக்கம் இல்லாமல் ஆன்மீகத்தை வரையறுக்க முடியாது. தமிழை வளர்க்க வேண்டினால் ஆன்மீகத்தையும் பரப்ப வேண்டும். அப்போது தான் தமிழ் வாழும் வளரும். ஆனால் இதை விடுத்து ஆன்மீகத்தை அழித்து தமிழை தனித்து, அழித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

திமுகவின் எண்ணத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் ஆளுநரை திமுக தனது கூட்டணி கட்சிகளை ஏவி ஆளுநர் குறித்து வசைபாட வைக்கிறது என்பது மக்களுக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது. தமிழரல்லாதோர் தமிழகத்தை ஆட்சி செய்ய பிற மொழியாளர்கள் இணைந்து கட்டமைத்ததே திராவிட பிம்பம். அதை மக்கள் உணரும் காலம் வந்துவிட்டது. குறிப்பாக ஒருமதத்தை புறக்கணித்து பிற மதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் தமிழக முதலமைச்சர். திமுக தலைவராக அவர் தனது சுய விருப்பு வெறுப்பு அடிப்படையில் தனக்கு பிடித்த மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லுவது அவர் உரிமை. 

ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி சுய விருப்பு வெறுப்புகளை கடந்து மதச்சார்பற்று செயல்படுவேன் என முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஸ்டாலின், இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியும் வசைபாடியும் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமலும் அரசியலமைப்பு சட்டத்தை மீறிவருகிறார். உள்ளபடியே ராஜினாமா செய்ய வேண்டியது முதலமைச்சர் தானே தவிர ஆளுநர் அல்ல.

ஆளுநர் தனது பணியை சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்து கொண்டிருக்கிறார், இனிமேலும் செய்வார். பதவிகளுக்காகவும் சுகபோக வாழ்க்கைக்காகவும் திமுகவிற்கு மட்டுமின்றி அதன் தலைவரின் வம்சாவளியினருக்கே காவடி தூக்கி சாமரம் வீசிக்கொண்டிருப்பவர்களுக்கு ஆளுநர் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. இரண்டு சீட்டுகளை மூன்றாக உயர்த்த திமுகவிற்கு ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 

மதச்சார்பற்ற கூட்டணி என கூறிக்கொண்டு இந்து மதத்தை புண்படுத்தி மற்ற மதங்களை வளர்த்து வரும் சந்தர்ப்பவாதிகளே., நீங்கள் எந்த பதவிக்கு அலைந்து இப்படி செய்கிறீர்கள் என்பதையும் விளக்க வேண்டும் . நீங்கள் திமுகவின் நிரந்தர நண்பர்கள் இல்லை. நாளை காலங்கள் மாறலாம் கூட்டணிகளும் மாறலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என  தேவநாதன் யாதவ் கூறியுள்ளார்.

click me!