தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே... பாட்டாவே பாடி பதில் சொன்ன ஓபிஎஸ்!

By Asianet TamilFirst Published Aug 14, 2020, 8:03 AM IST
Highlights

அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 'தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே..’ என்று எம்.ஜி.ஆர் நடித்த ‘ நாளை நமதே’ படத்தின் பாடலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
 

அதிமுக சார்பில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. அமைச்சர் செல்லூர் ராஜ், அடுத்த முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் கூடி தேர்வு செய்வார்கள் என்று பேசப்போக, அதற்கு பதில் அளிக்கும்விதமான ‘எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்’ என்று ட்விட்டரில் பதிவிட்டார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்தக் கருத்துகள் பற்றி பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல’ என்று தெரிவித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இதுபற்றி கூறுகையில், ‘தலைமைப் பற்றி உரிய நேரத்தில் கட்சி அறிவிக்கும்’ என்று தெரிவித்தார்.
தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுகவில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்ற சர்ச்சை ஓடிக்கொண்டிருப்பதை அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியோடு பார்த்துவருகிறார்கள். இந்நிலையில் இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ட்விட்டரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டார். அதில், ‘தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!’ என்று பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.


பிறகு இந்தப் பதிவை ரீட்வீட் செய்த ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘நாளை நமதே’ படத்தில் இடம் பெற்ற பாடலில் வரும்,   'தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே..’ என்ற பாடலையும் பதிவிட்டுள்ளார். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

click me!