மஹாராஷ்ட்ராவில் துணை முதல்வராகும் அஜித் பவார்... பாஜகவின் அதே ஆஃபரை கொடுக்கும் உத்தவ் தாக்கரே..!

By Thiraviaraj RMFirst Published Dec 25, 2019, 12:49 PM IST
Highlights

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் அடுத்த துணை முதல்வராகும் வாய்ப்பு அஜித் பவாருக்கு உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டார். 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் அமைச்சராக பதவியேற்று கொண்டனர்.

அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் பாஜக ஆளும் கட்சிகள் மீது கேள்வி கணைகளை தொடுத்தது. நேற்று அமைச்சரபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அது நடைபெறவில்லை. அடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

அவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அவர்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகின.  வரும் 30- ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர் பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் பவார் ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்வராகக பதவி வகித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு உள்துறை பொறுப்பு செல்லக்கூடும். அதே நேரத்தில் அஜித் பவார், இரண்டு துறைகளின் பொறுப்போடு துணை முதல்வராகலாம் என கூறப்படுகிறது.

அஜித் பவாரை அமைச்சரவையில் சேர்க்காமல் மராட்டிய அரசாங்கத்தில் எந்தவொரு விரிவாக்கமும் சாத்தியமில்லை. அவர் நிச்சயமாக விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் ஒரு பகுதியாக இருப்பார் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் கூறி உள்ளார். பாஜக ஆட்சி அமைத்தபோது துணை முதல்வராக அஜித் பவார் இருந்தார். 

click me!