மோடியின் ரூபாய் நோட்டு தடையால் நாட்டுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு... பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு!

First Published Nov 15, 2017, 5:25 PM IST
Highlights
Demonetisation has caused a loss of Rs 3.75 lakh crore economy standing on one leg Yashwant Sinha


பிரதமர் மோடி அமல்படுத்திய ரூபாய் நோட்டு தடையால், நாட்டுக்கு ரூ. 3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த்சின்ஹா மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். 

குஜாரத்தில் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ‘லோக் பச்சாவோ அபியான்’ என்ற அமைப்பு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் குறித்து பேச பா.ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று 3 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். 

அமதாபாத் நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது-

அனுமதிக்கவில்லை

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை  மிக முக்கியமானது என மோடி முடிவு செய்து இருந்திருக்கிறார். அதனால்தான், ரிசர்வ் வங்கி கவர்னர், நிதி அமைச்சர் கூட அறிவிக்க அனுமதிப்பதற்கு பதிலாக தானே முன்வந்து இதை அறிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு தடை அறிவிக்கும்போது ஏறக்குறைய ஒரு மணிநேரம் மக்களுக்கு மோடி உரையாற்றினார். அதில் 75 முறை கருப்புபணம், கள்ளநோட்டு, தீவிரவாதம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒருமுறை கூட டிஜிட்டல் பரிமாற்றம் குறித்தோ, குறைந்த பண பொருளாதாரம் குறித்தோ அவர் குறிப்பிடவில்லை.

இலக்கு அடையவில்லை

தான் நினைத்த இலக்குகளை ரூபாய் நோட்டு தடை அடையவில்லை என்றவுடன், மோடி குறைந்த பணப் பொருளாதாரத்தை பற்றி மக்களிடம் பேசத் தொடங்கிவிட்டார். அந்த நேரத்தில் நாடு ஏற்கனவே பணமில்லாத நிலைக்கு மாறி இருந்தது. மக்கள் ஒருவரிடத்திலும் பணம் இல்லாமல் இருந்தது.

திருடர்களா?

ரூபாய் நோட்டு தடைக்கு பின் சட்டவிரோதமாக 18 லட்சம் டெபாசிட்கள் செய்யப்பட்டதாக மோடி கூறினார். உலகம் முழுமைக்கும் இந்தியா திருடர்களால் நிறைந்தது என்ற செய்தியை இதன் மூலம் கூறிவிட்டார். அதாவது, நாம் எல்லோரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோம், யாரும் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறினார்.

ரூ.3.75 லட்சம் கோடி

ரூபாய் நோட்டு தடையின் மூலம் பொருளாதாரச் செயல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, நாட்டுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வாஜ்பாய்  செய்யவில்லையா?

அனைத்தையும் ஊடக வெளிச்சத்தில் கொண்டு வருவதுதான், இன்றுள்ள சூழலில், புதிய வழக்கம். இதற்கு முன் ஆண்ட ஆட்சியாளர்கள் ஏதையுமே செய்யவில்லை என்று ஒரு சிலர், பேசுவது இப்போது வழக்கமாக இருந்து வருகிறது.

அடல்பிஹாரி வாஜ்யால் கூட நாட்டை 6 ஆண்டுகள் ஆட்சி செய்தார். கடந்த 70 ஆண்டுகளாக யாருமே எதுவும் செய்யவில்லை செய்யவில்லை என்று கூறுபவர்கள், வாஜ்பாய் ஆட்சியின் போதும் நாட்டுக்கு எதுவுமே நல்லது நடக்கவில்லை என்கிறார்களா?. அப்படி என்றால், வாஜ்பாய்க்கு ஏன் பாரத ரத்னா விருது கொடுத்தார்கள்?. இது என்ன மனநிலை என்றால்?. நான் சொல்வதுதான் சரி. மற்றவர்கள் சொல்வது அல்ல என்பதை காட்டுகிறது. 

எந்த விஷயத்திலும் வாஜ்பாய் கருத்து ஒற்றுமை ஏற்பட எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிப்பார். இந்த பாடத்தை நான் அவரிடம்தான் கற்றேன். எதிர்க்கட்சிகள் எதிரிகள் அல்ல.

நிதி அமைச்சர் பெருமை

நம்முடைய நிதி அமைச்சர் நம் நாட்டின் பொருளாதார அடிப்படை கட்டமைப்புகள் வலிமையாக இருப்பதாகக் கூறுகிறார். நிதிப்பற்றாக்குறை 3 சதவீதமாகவும், நடப்பு கணக்குப் பற்றாக்குறை 1.25 சதவீதமாகவும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாவும் பேசுகிறார். பங்குச்சந்தைகள் உயர்ந்து, மகிழ்ச்சியும், அமைதியும் நிலவிவருவதாக பெருமை பேசுகிறார். இப்போது, அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் கூட சான்றிதழ் அளித்து விட்டார்.

விலை குறைந்தது யாரால்?
கடந்த 2014ம் ஆண்டு பா.ஜனதா அரசு பொறுப்பு ஏற்கும்போது, பெட்ரோலிய கச்சா எண்ணெய் 110 அமெரிக்க டாலராக இருந்தது. அடுத்த சில மாதங்களில் அது 29 டாலராகக் குறைந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்தது அவர்களால்தான் என நினைக்கிறார்கள். அவர்களால் அல்ல.

குஜராத்தின் சிங்கமான மோடியின் கர்ஜனையைக் கண்டு பயந்து எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் விலையைக் குறைக்கவில்லை, அவர்கள் விலையை குறைக்க முடிவு செய்து குறைத்தார்கள். ஆனால், இந்த விலைக் குறைப்பை சாதகமாகப் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த தவறிவிட்டனர்.

புயலுக்கு முந்தைய அமைதி

புயலுக்கு முந்தைய அமைதியைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலர்களைத் தொட்டுவிட்டது. பங்குச்சந்தைகள் ஆட்டம் காண்கின்றன, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. நாம் பாதுகாப்பாக, வசதியாக இருக்கிறோம் என்ற உணர்வு மாறிவிட்டது, முடிவுக்கு வருகிறது. நான் அழிவின் தீர்க்கதரிசியாக இருக்க விரும்பவில்லை. 

இன்று நம்முடைய பொருளாதாரம் ஒற்றைக்காலில் தள்ளாடுகிறது. குறைந்திருந்த கச்சா எண்ணெய்விலைதான் நமக்கு ஆதரவாக இருந்தது. அதுவும் எத்தனை நாட்களுக்கு குறைவாக இருக்கும் என யாரும் கணிக்கவில்லை. உள்நாட்டு தேவை, சேமிப்பு ஆகியவைதான் நாட்டின் பொருளாதாரத்துக்கு வழிகாட்டுபவை. அன்னிய நாடுகளின் தேவையோ, முதலீடோ அல்ல.

மோடி-துக்ளக் ஒப்பீட

இந்திய வரலாற்றில் ஏராளமான அரசர்கள், ஆட்சியாளர்கள், ராஜாக்கள் ரூபாய் நோட்டு தடையை செயல்படுத்தியுள்ளனர். 700 ஆண்டுகளுக்கு முன், இந்த நாட்டை ஆண்ட மன்னர் ஒருவர் தன் ஆட்சியில் இருந்த தங்க, வெள்ளி கரன்சியை நீக்கிவிட்டு,  செம்பு, பித்தளையில் செய்யப்பட்ட தனது புதிய காசுகளை அறிமுகம் செய்தார். அவர்தான் முகமது பின்துக்ளக். தலைநகரை டெல்லியல் இருந்து தவுலதாபாத்துக்கு மாற்றி மக்களை சிக்கலுக்கு உள்ளாகியவர்.

 இவ்வாறு அவர் பேசினார்.

click me!