அதிமுகவில் பூத்துக்குலுங்கும் ஜனநாயகம்... முக்கிய முடிவெடுத்த ஓ.பி.எஸ்..!

By Thiraviaraj RMFirst Published Oct 5, 2020, 1:33 PM IST
Highlights

அதிமுகவுக்குள் கோஷ்டி கானம், ஒலித்துக் கொண்டிருந்தாலும் திமுகவில் இப்படிப்பட்ட ஜனநாயகம் இல்லவே இல்லை என்கிற கருத்தும் ஓங்கி ஒலித்து வருகிறது.

செயற்குழு, பொதுக்குழு என்பவை சம்பிரதாய சடங்குகள் என்பது அரசியல் அரிச்சுவடி. ஆனால் ‘ஆளுமைகள்’என்கிற சகல அதிகாரம் கொண்ட சர்வாதிகார பிம்பங்கள் இல்லாத சூழலில்தான், ‘ஜனநாயகம்’பூத்துக் குலுங்குகிறது. அது இப்போது அதிமுகவில் நடந்து கொண்டு இருக்கிறது. திங்கட்கிழமை செப்டம்பர் 28 ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஆளாளுக்கு பேசும் வாய்ப்பு பெற்றதை; பேசியதை; கட்டுப்பாடற்ற தன்மை என சிலர் கூறலாம். ஆனால், உள்கட்சி அமர்வுகளில் காணக் கிடைத்த அதிகபட்ச ஜனநாயகமாகவும் இதைப் பார்க்கலாம். இதே திமுகவில் கருணாநிதி குடும்பத்தினரை தவிர, முதல்வர் வேட்பாளருக்கு யாராவது மோத இயலுமா.? 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற சர்ச்சை சில வாரங்களாக அதிமுக முகாமை உலுக்குவது நிஜம். ஆனால் திங்கட்கிழமை கூட்டத்தின் பிரதான அஜென்டா அது இல்லை. தேர்தல் ஆணைய விதிப்படி, வழக்கமாக நடத்தப்பட வேண்டிய செயற்குழு இது. அந்த அடிப்படையில் கூடி, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும், தமிழக அரசைப் பாராட்டியும் தீர்மானங்களை நிறைவேற்றினர். அது பெரிய செய்தியாகவும் இல்லை. விவாதத்திற்கும் வரவில்லை.

அதைத் தாண்டிய நிகழ்வுகள் அனைத்தும் காரசாரமாக அரங்கேறின. வழக்கமாக தலைமைக் கழகத்தில் ஒரு கூட்டம் என்றால், சென்னை அதிமுக தொண்டர்கள் அங்கே திரள்வார்கள். இந்த முறை தேனி, மதுரைக்காரர்கள் திரளாகத் தெரிந்தனர். அவர்களில் பலரது கைகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முகம் தாங்கிய மாஸ்குகள். ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தபோது, ‘வருங்கால முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க!’என அவர்கள் கோரஸாக கோஷமிட்டபோதே, கட்சிக்குள் கோஷ்டியுத்தம் கும்மியடிப்பது வெளிப்படையாக தெரிந்தது.

இது ஒருபுறமிருக்கட்டும். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதில் இப்போது வரை ஓ.பி.எஸுக்கு உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை அதற்கு சம்மதிக்க வேண்டுமென்றால், கட்சியை நடத்தும் முழுமையான அதிகாரத்தை தனக்கு தரவேண்டும் என அவர் கேட்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், அதற்கு எடப்பாடி தரப்பு இப்போதுவரை தயாராக இல்லை என்பதும் நடக்கும் நிகழ்வுகளே சாட்சி.  

முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு கெடு நெருங்கி வரும் சூழலில், இன்னமும் இதில் ஒரு முடிவை அதிமுக எட்டியதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இன்று ஓபிஎஸ் வெளியிட்ட ட்வீட்டில், ‘தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும் எனக்கூறி கீதை வரிகளை எடுத்து பதிவிட்டிருந்தார் ஓ.பி.எஸ்.

இந்தப் பதிவின் மூலமாக முக்கியமான ஒரு முடிவுக்கு ஓ.பி.எஸ் வர இருப்பதாகக் கூறப்படுகிறது. 2017-ல் தர்மயுத்தம் நடத்தியபோது கிடைத்த ஆதரவு இப்போது ஓ.பி.எஸுக்கு கிடைக்குமா? என்பது பெரிய சந்தேகம். ஏனெனில் அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்பதை பிரதான அஸ்திரமாக ஓ.பி.எஸ் பயன்படுத்தினார். ஆனால் இப்போது பிரச்னை பதவி ரீதியிலானது. முந்தைய தர்மயுத்த கோரிக்கையின்படி அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஓ.பி.எஸ் ஆஜராகவில்லை. ஆட்சியில் இடம் பெற்ற பிறகு, ஜெ.மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரிக்கையையும் கைவிட்டார். பரவலாக அவரை நம்பிச் சென்ற ஆதரவாளர்களுக்கு அவர் பெரிதாக உதவி செய்யவில்லை என்கிற குமுறலும் இருக்கிறது. எனவே தர்மயுத்தம் 2.0-வுக்கான வாய்ப்பு குறைவு.

ஆகவே இனியும் தாமதிக்கக்கூடாது. ஒரு முடிவுக்கு வரவேண்டும் எனக் கருதிய ஓ.பி.எஸ் 7ம் தேதி நடக்க உள்ள முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள தேனியில் இருந்து இன்று கிளம்புகிறார். ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸை தவிர்த்துவிட்டு, உயர்மட்ட நிர்வாகிகளையோ மாவட்டச் செயலாளர்களையோ பொதுக்குழுவையோ இபிஎஸ் கூட்டிவிட முடியாது. கீதையின் வரிகளை தன் ட்வீட்டில் சுட்டிக்காட்டியிருக்கும் ஓபிஎஸ், கீதையை மிக நேசிக்கும் டெல்லி வாலாக்களின் சிக்னலுக்கு காத்திருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. 

எது எப்படியோ ஓ.பி.எஸ் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டார். இனி அவரிடம் சமரசப்பேச்சுவார்த்தை எடுபடாது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இப்படி அதிமுகவுக்குள் கோஷ்டி கானம், ஒலித்துக் கொண்டிருந்தாலும் திமுகவில் இப்படிப்பட்ட ஜனநாயகம் இல்லவே இல்லை என்கிற கருத்தும் ஓங்கி ஒலித்து வருகிறது.

click me!