
ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் குமார் விஷ்வாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், ‘அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தேசத்தின் பிரதமராக போவதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதனை வைத்துக்கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,’ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் கனவுகண்டார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், மற்ற மாநிலங்களில் அவரது கனவு நனவாகவில்லை.
அம்பேத்கர் கண்ட கனவு டெல்லியில் நிறைவேறி இருக்கிறது. இதையறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லி அரசு கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 20,000 வகுப்பறைகளை கட்டியுள்ளது. எனக்கு எதிராக அவர்கள் கும்பலாக திரும்பியுள்ளனர். என்னை அவர்கள் தீவிரவாதி என கூறி வருகின்றனர்.
இது தான் உலகின் மிகச் சிறந்த காமெடி. சரி நான் தீவிரவாதி என்றால் மோடி என்னை கைது செய்ய வேண்டியதுதானே, ஆமாம் நான் ஒரு தீவிரவாதி தான், பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் நலத்திட்ட உதவிகள் என நல்லவை மட்டுமே செய்யும் ஒரு இனிமையான தீவிரவாதி” என்று கூறினார்.