தமிழக அரசின் தீபாவளி போனஸ் அறிவிப்பு..! உற்சாகத்தில் அரசு பணியாளர்கள்..!

By Manikandan S R SFirst Published Oct 16, 2019, 3:37 PM IST
Highlights

தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதற்கான விற்பனைகள் மாநிலம் முழுவதும் களைகட்ட தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்துக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் உபரி தொகைக்கு ஏற்ப 20 சதவீதம் வரையிலும் மற்ற கூட்டுறவு சங்கம் சங்கங்களில் இருக்கும் தகுதியுடைய பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகையும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், லாபம் ஈட்டியிருக்கும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வசதி சங்க பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகையும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், சர்க்கரை ஆலைகள், தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் போன்ற நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களுக்கு உபரி தொகையை கருத்தில் கொண்டு 20 சதவீதம் அல்லது 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.

இவை அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு சுமார் 472 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் குறைந்தபட்ச போனஸ் தொகையாக 8400 ரூபாயும் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் போனஸ் வழங்கப்பட இருக்கிறது.

click me!