
எடப்பாடி தரப்பில் இருந்து அழைப்பு வந்தால், இருக்குற அமைப்பு எல்லாவற்றையும் கலைத்துவிட்டு எடப்பாடி தரப்போடு ஐக்கியம் ஆகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அணிகள் இரண்டாக பிளவுபட்ட நிலையில், அதிமுக அம்மா அணி சார்பில், அதன் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்டார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டார். பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களால் இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இதனை அடுத்து, வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்க உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு அபாரமாக வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இந்த தொகுதியை கைப்பற்றுவது என்பது அதிமுகவுக்கு தன்மானப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
திமுக சார்பாக மருதுகணேஷ் களமிறக்கப்படுகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. பாஜகா சார்பில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட கங்கை அமரனா? அல்லது வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாமா என்ற யோசனையில் பாஜக உள்ளது.
இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தீபாவை பொறுத்தவரைக்கும் இந்த தேர்தலில் எப்படியாவது போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
இந்த நிலையில், எடப்பாடி தரப்பில் இருந்து நேரடியாக பேசினால் அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி யோசிக்கலாம் என்றும் தீபா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். அது மட்டுமல்லாது, நாம எதிர்க்கிறது சசிகலா குடும்பத்தைத்தான் என்றும், எடப்பாடியை அல்ல என்றும், ஒருவேளை எடப்பாடி தரப்பில் இருந்து அழைப்பு வந்தால், இருக்குற அமைப்பு எல்லாவற்றையும் கலைத்துவிட்டு எடப்பாடி தரப்போடு ஐக்கியமாகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஜெ. அண்ணன் மகள் தீபா.