
நாங்கள்தான் உண்மையான அதிமுகவினர் என கூறி தேர்தல் ஆணையத்தில் ஜெ.தீபா பேரவையினர் 52, 000 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் சின்னம் ஒதுக்கீடு பிரச்சனையில், அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் நாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும், எனவே இரட்டை இலை சின்னம் எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து சசிகலா தரப்பும், ஒ.பி.எஸ் தரப்பும் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தயார் செய்து, கொடுத்து வருகின்றனர்.
கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா அணி சார்பில் 47,151 பிரமாண பத்திரங்கள் தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே அந்த வரிசையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய களம் இறங்கியுள்ளார்.
நாங்களும் உண்மையான அதிமுக தான் எனவும், எங்களுக்கே கட்சி, கொடி, சின்னம் அனைத்தையும் ஒதுக்க வேண்டும் என ஜெ தீபா பேரவையினர் தேர்தல் ஆணையத்தில் 52,000 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
நாங்களும் ரவுடிதான் நாங்களும் ரவுடிதான் என்ற கதையாய் அதிமுகவின் நிகழ்வுகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.