
ஆர்.கே.நகரில் தமது பேரவை தொண்டர்கள் அனைவரையும் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார் தீபா.
மீனவ மக்களும், அட்டவணை பிரிவு மக்களும் அதிக அளவில் வசிக்கும் இந்த தொகுதியில், படகு சின்னம்தான் நம்மை கரைசேர்க்க போகிறது என்று சென்டிமென்ட்டாக பேசினார் தீபா.
தாம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பேன் என்று நினைத்தவர்கள், அரசியலில் இருந்து தம்மை அப்புறப்படுத்தத் திட்டமிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக தொண்டர்கள் தமக்குப் பின்னால், திரண்ட போது, சசிகலா காலில் விழுந்தவர்கள் எல்லாம் இப்போது தமக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்றார்.
சசிகலாவை கட்சிப் பதவியேற்க, கால்கடுக்க நின்று அழைத்தவர்தான் இன்று பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் என்பதையும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் சம்பாதித்த பணத்தைத்தான், தினகரனும் பன்னீர்செல்வமும் செலவு செய்கிறார்கள். பணம் கொடுத்து வாக்குகளை வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
என்னை பொம்மையாக வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்க நினைத்த அனைவரையும் ஒதுக்கித் தள்ளிவிட்டேன்.
இப்போது எனக்கென்று எந்த உறவும் இல்லை. துரோகத்துக்கு நான் என்றுமே இடம் கொடுக்க மாட்டேன் என்று பொரிந்து தள்ளிய தீபா, ஆர்.கே.நகர் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.