"கட்சியை உடைக்க தீபாவுக்கு ஆதரவு திரட்டுறீங்களா?" - கடும் மோதல்

First Published Jan 10, 2017, 11:42 AM IST
Highlights


கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்று கொண்டனர். இதில், அதிமுகவினர் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக தீபாவின் போஸ்டர், கட்அவுட், பேனர்களை வைத்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து, வேலூர் மேற்கு மாவட்டத்தில், தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மாதனுார், ஆம்பூர், ஜோலார்பேட்டை என, அனைத்து ஊர்களிலும், தீபாவுக்கு ஆதரவாக, நூற்றுக்கணக்கான பேனர்கள் வைத்துள்ளனர். மேலும், தீபா பேரவை, ஜெயலலிதா தீபா பேரவை, அகில இந்திய புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை என துவங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரும், அதிமுக கிளை தலைவருமான, கார்மேகம் (59) என்பவர் தீபாவின் ஆதரவாளராக உள்ளார். இவரது கம்ப்யூட்டர் சென்டரில், நேற்று முன்தினம் இரவு, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தீபா ஆதரவாளர்கள், தீபா பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, அங்கு சென்ற அதிமுகவினர் சிலர், 'கட்சியை உடைப்பதற்காக தீபாவுக்கு ஆதரவு திரட்டுகிறீர்களா' என கேட்டனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில், தீபாவின் ஆதரவாளர்கள், 6 பேர் காயமடைந்தனர்.

இருதரப்பு புகார்களை பெற்று கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

click me!